Friday, 30 January 2015

தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்

 


இரண்டாண்டு காலம் ஆசிரியர் பயிற்சி முழுமையாக முடித்து தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மேல்நிலைத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களுக்கு விடைத்தாளின் ஒளி நகல் வழங்குவதுபோல் தற்போது ஜுன் 2014 முதல் தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் /  தனித் தேர்வர்களும் பயன் பெறும் வகையில் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும், விடைத்தாளின் நகல் பெறப்பட்ட பின்னர் விருப்பமுள்ள தேர்வர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த அரிய வாய்ப்பின் மூலம் தங்களின் விடைத்தாட்கள் சரியாகத் திருத்தப்பட்டுள்ளனவா என்று அறிந்துகொள்ள விரும்பும் மாணவ / மாணவிகளின் விடைத்தாட்களின் ஒளி நகல் பெற
www.tndge.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து கொண்டு, பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தொகையை கீழ்க்குறிப்பிட்ட நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்தி ஆன்லைன்  மூலம் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.



விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்  - 02.02.2015 திங்கட்கிழமை முதல் 6.02.2015 வெள்ளிக்கிழமை வரை

• தற்போது புதிதாக விடைத்தாள் நகல் நாட்களில்  மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து தற்போது விடைத்தாள் நகல் வேண்டி விண்ணப்பிப்பவர்கள்.  ஒரு பாடத்திற்கு ரூ.70/- 

30.12.2014 முதல் 05.01.2015 வரை விடைத்தாளின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.275/- ஒரு பாடத்திற்கு ரூ.205/- செலுத்த வேண்டும்.

மறுகூட்டல் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலேயே கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு  அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.


வரிசை எண் 1 மற்றும் 2ல் குறிப்பிட்ட  தேர்வர்கள் ஆன்லைன் கட்டணம் ரூ.50/- கூடுதலாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06.02.2015 மாலை 5.00 மணி வரை.

ஜூன் 2015 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு வருகை புரியவிருக்கும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மாணவர் மேம்பாட்டுக்காக பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் தொடக்கம்



 


காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில், கல்லூரி மற்றும் மாணவர் மேம்பாட்டுக்காக முன்னாள் மாணவர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.


காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் செயல்படும் புதுச்சேரி அரசு கல்வி நிறுவனமான பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும்  தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் (அலும்னி அசோசியேஷன்) முதலாமாண்டாக தொடங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.


கல்லூரி முதல்வர் பி.தம்பிதுரை தலைமை வகித்து, கல்லூரியில் கல்வி முடிந்து வெளியேறிய முன்னாள் மாணவர்களிடையே புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு ஏற்பாடு செய்தார். இதன்படி தலைவராக கோ.திணேஷ்குநாத், துணைத் தலைவராக கே.வேலுமணி, பொதுச்செயலராக எஸ்.சதீஷ்குமார், இணை செயலராக எஸ்.ராஜரூ, பொருளாளராக டி.சரண்யா மற்றும் செயற்குழு உறுப்பினராக 7 பேர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பேசும்போது, பொறியியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டவேண்டும். தாற்காலிக கட்டடத்தில் கல்வி பயின்று வெளியேறிய மாணவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். பயிலும் மாணவர்கள் அச்சிரமத்தை சந்திக்காதிருக்க நிரந்தர கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்லூரியில் வேலைவாய்ப்புக்குரிய புதிய பாடப் பிரிவுகள் தொடங்கவேண்டும். முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில், மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தால் பயிற்சி அளிக்கவேண்டும். சிறந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும். நூலகத்தில் தரமான நூல்களை வாங்கிவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினராக இருப்பர். கல்லூரியில் பயிலும் மாணவர்கள், கல்வி முடிந்து வெளியேறும் மாணவர்களுக்கு, மூத்த மாணவர்கள் துணையாக இருக்கவேண்டும். உயர்கல்வி, வேலைவாய்ப்புக்குரிய ஆலோசனைகள் வழங்கவேண்டுமென கல்லூரி முதல்வர் பி.தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தார்.


கல்லூரி பேராசிரியர்கள் பி.குமார், எம்.ஆராமுதன், கல்லூரி முதுநிலை கணக்கு அலுவலர் துரைராஜன், கல்லூரி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோபிநாத் உள்ளிட்டோர் மாணவர் சங்க நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.

எம்பிஏ படிப்புக்கு அழைப்பு விடுக்கும் காமராசர் பல்கலை


 


மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


2015-16ம் கல்வியாண்டில் எம்பிஏ படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் mkuniversity.org என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ.600 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.


நுழைவுத்தேர்வு அடிப்படையிலும், குழுகலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


மார்ச் 14 மற்றும் 15ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு மதுரை பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

யுஜிசி வழங்கும் கல்வி ஆராய்ச்சி உதவித்தொகை அதிகரிப்பு

 

கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு உதவித்தொகை திட்டங்களை மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக்குழு மூலம் செயல்படுத்தி வருகிறது.


இந்த நிலையில், கடந்த நவம்பர் 17ம் தேதி நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் அனைத்து வகை கல்வி உதவித்தொகைகளும் உயர்த்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வு பெற்ற பிறகும் ஆராய்ச்சியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் பேராசிரியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.31 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.


இதுபோல, முழுநேர ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கான உதவித்தொகை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.38,800 என்ற அளவிலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் ரூ.46,500 என்ற அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளது.


குடும்பத்தில் தனி பெண் குழந்தையாக இருந்து ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்பவர்களுக்கான உதவித்தொகை மாதம் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.12,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மாதம் ரூ.15,000 என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும்.


குடும்பத்தில் தனி பெண் குழந்தையாக இருந்து முதுநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்பவர்களுக்கும், பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்று முதுநிலைப் பட்டப்படிப்பு மேற்கொள்பவர்களுக்கும் இதுவரை மாதம் ரூ.2 ஆயிரம் என்ற அளவில் 20 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இந்தத் தொகை இப்போது ரூ.3,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


இதுபோல, பிற கல்வி உதவித்தொகைகளும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய முழுவிவரங்கள் தெரிந்து கொள்ள www.ugc.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Saturday, 10 January 2015

மாணவர்களுக்கான இணைய தளங்கள்

 
 
தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும். 


பொதுத்தளங்கள்
 
அனைத்துப்பாடங்களுக்குமான குறிப்பேடுகள், பவர்பாயின்ட், விடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத்தளத்தில் கிடைக்கின்றன . 

 
 
 
தமிழ்
 
 
 
 
இவ்வலைப்பூவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடத்திட்டம், வினாத்தாள் அமைப்பு, கற்றல் குறைவான மாணவர்களுக்கான வினா-வங்கி, ஒரு மதிப்பெண் கேள்விகள் ஆகியவை இடம்பெறு கிறது. பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட் , வீடியோ, ஆடியோவும் கிடைக்கும். 

Maths 

 

 
இத்தளத்தில் கணிதப் பாடக்குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட் கிடைக்கிறது. 

Science 
 
 
இத்தளத்தில் அறிவியல் பாடக்குறிப்புகள் கிடைக்கும்.

2014: கரை சேர்ந்ததா கல்வி?

 

முதலில் இரண்டு செய்திகள். ஒன்று ‘எல்லோருக்கும் கல்வி’ என்ற குறிக்கோளை, உலகம் நிறைவேற்ற முடியாமல் முடங்கி கிடப்பதற்கு இந்தியாதான் முக்கிய காரணம் என்கிறது யுனெஸ்கோ. நம் நாட்டில் 37 சதவீதம் மக்கள் எழுத்தறிவு (கவனிக்க: கல்வியறிவு அல்ல) இல்லாமல் இருப்பதாக அது தெரிவிக்கிறது. 

இரண்டு, உயர் கல்வி வழங்குகிற நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது. சமீபத்திய எர்னஸ்ட் - யங் அறிக்கையின்படி நம் நாட்டில் 44,668 கல்வி நிலையங்கள் உயர்கல்வி வழங்குகிறதாம். 

சீனாவில் 4192 என்றால் அமெரிக்காவிலேயே 6,500 தான் உள்ளதாம்.
சரி, இந்த முரண் நிஜங்களை விவாதிப்பதற்கு முன் இன்னொரு முக்கிய புள்ளிவிவரத்தையும் பார்த்துவிடலாமே! 


கல்வி மற்றும் பயிற்சிக்கான முக்கியமானச் சந்தையாக இந்தியா இருக்கிறது என்கிறது இன்வெஸ்டர் ரிலேஷன் சொசைட்டி. தொடர்ந்து வருடா வருடம் வேலை வாய்ப்புகள் பெருகும் துறை கல்வித்துறையே என்கிறது இண்டியன் ஜாப் அவுட்லுக் சர்வே. 



என் பார்வையில் 2014- ல் கல்வியின் முக்கிய போக்குகள் இவை தான்:
 
# ஆரம்பக் கல்வி சவலைப்பிள்ளையாய்தான் இருக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் மற்றும் இன்ன பிற அரசாங்க, தனியார் மற்றும் அயலார் முயற்சிகள் சில நகர்வுகளை ஏற்படுத்தினலும் வீச்சும் தரமும் இன்னமும் போதுமானதாக இல்லை. அரசாங்கத்திடம் அதிக ஆதாயம் பெறும் கார்ப்பரேட்டுகள் கருணை காண்பித்தால் சி.எஸ்.ஆர் புண்ணியத்திலும் சில மாறுதல்கள் கொண்டு வரலாம். 


# அதே போல ஆசிரியர் பயிற்சிக்கும், கல்வி முறை புதுப்பித்தலுக்கும் இன்னமும் நிறைய முதலீடுகள் தேவை. 2014 ஆம் ஆண்டில் இவை சொல்லிக்கொள்ளும் அளவு நடைபெறவில்லை. 

# பள்ளிகளில் தாய்மொழி, கைத்தொழில், விளையாட்டு, கலை, நீதி போதனை போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. கணிதமும் அறிவியலும் ஆங்கிலமும் முன்னிறுத்தப்படும் போக்கு வலுத்துள்ளது. நகரங்களை மிஞ்சும் வண்ணம் கிராமங்களிலும் இவை தீவிரமாக வளர்ந்து வருகின்றன.
தனியார் பள்ளி மோகமும் ஆங்கிலம் பற்றிய அச்சமும், பிற்கால வேலைக்கு இவை மட்டும்தான் பயன்படும் என்கிற நுகர்வோர் மன நிலையும் முக்கியமான காரணங்கள். 

# திறன் பற்றாக்குறைதான் இந்தியாவின் பேராபத்து. 130 கோடிகள் கொண்ட மக்கள் தொகையில் 80 கோடி மக்கள் வேலை பார்க்கக்கூடியவர்கள். திறனற்ற மாணவர்களை உருவாக்கியதால் உலகம் முழுக்க நம் நாட்டவர் சென்று பணியாற்றக் கூடிய அற்புத வாய்ப்பை தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.
பொறியியல் மாணவர்களில் வெறும் 17 சதவீதமும், நிர்வாக மாணவர்களில் வெறும் 10 சதவீதமும்தான் வேலைக்குத் தகுதியானவர்கள் என்ற அதிர்ச்சியான புள்ளிவிவரத்தை 2014- ல் சி.ஐ.ஐ நிறுவனம் ‘இண்டியா ஸ்கில் ரிப்போர்ட்’ டில் சுடச்சுட வெளியிட்டுள்ளது. கல்வித்துறையைச் சாராமல் திறன் வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும் என அது சொல்வதைக் கவனிக்க வேண்டும். பள்ளிகளில் கைத்தொழில்கள் கற்றுத் தரும் காலம் தான் வருங்காலத்தைக் காப்பாற்றும். 

# கடந்த 20 வருடங்களாக பொறியியல் பட்டதாரிகள் தேவைக்கும் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் பொறியியல் பட்டதாரிகள் அந்த வேலை கிடைக்காமல் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் அதிகரிப்பது மக்களின் விழிப்புணர்வைக் காட்டுகிறது. 

தமிழகத்தில் மட்டுமல்ல, வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களிலும் இதுவே நிலை. ஒரு Default Degree அந்தஸ்தை பி.ஈ துறப்பது ஒரு ஆரோக்கியமான போக்கு. கலைக் கல்லூரிகளையும் மக்கள் சற்று ஏறெடுத்துப் பார்க்கும் வாய்ப்புகள் தென்படுகின்றன. 

# இந்தியாவின் 10 சதவீத மக்களுக்குத்தான் உயர்கல்விக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் உயர்கல்விக்காக இங்கு ஒரு பெரிய சந்தை உருவாகியுள்ளது. பல வெளி நாட்டு பல்கலைக் கழகங்கள் மெல்ல இங்கு கடை விரிக்கும் போக்கு பெருகியுள்ளது. “மேக் இன் இண்டியா” கல்வித்துறையில் பலமாக வெற்றிப் பெறும் எனத் தோன்றுகிறது. அது இந்தியர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதுதான் என் அவா. 


# வெளி நாட்டுக் கல்வி வாங்க விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. வெளி நாட்டு பல்கலைக் கழகங்களும் இங்கு தொடங்கப்படுவதால் அயல் நாட்டு கல்வி அனுபவங்கள் இங்கு கிடைப்பதன் பலன் கல்விக்காக வெளிநாடுகளுக்குப் போவதைத் தடுக்குமா என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும். 

# ஆன்லைன் கல்வி முறை பிரபலமாகி வருகிறது. 2014- ல் மட்டும் இந்தியாவின் பல பெரிய பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் உலகமெங்கும் மாணவர்களை சேர்க்க ஆரம்பித்துள்ளன. Coursera போன்ற பன்னாட்டு முயற்சிகள் உலகின் எந்த பல்கலைக்கழக படிப்பையும் உங்கள் மடிக்கணினியில் இலவசமாகத் தருவது இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 

எந்த அடிப்படையும் இல்லாமல் எந்தப் பாடத்தை வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம் எனும் வசதிதான் இதன் வெற்றிக்குக் காரணம். பாரம்பரியக் கல்வியின் குரல்வளையை ஆன்லைன் கல்வி நெரிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. 

#பெரியார் மிச்சம் வைத்த சீர்திருத்தத்தைத் தொழில்நுட்பம் செய்து முடிக்கும். சாதி, மத, வர்க்க பேதமின்றி அவர்கள் வசதிக்குக் கல்வி கற்கும் வசதி எல்லோருக்கும் வாய்க்கும் எனத் தோன்றுகிறது. கைப்பேசியில் மொபைல் கல்வி வலைதளங்கள் 2015-ல் பிரபலமாகலாம். 

# இன்றைய பள்ளி மாணவர்கூட “மாதா பிதா கூகுள் தெய்வம்” என்கிறார். பத்தாவது டியூஷன் போகும் மாணவர்கள் Khanacademy, Mertitnation வலைதளங்கள் சென்று அதிலும் படிக்கிறார்கள். ஆசிரியரை மீறி கற்கும் வாய்ப்பும் விபரீதமும் உள்ளன. 

# பழைய அதிகாரங்கள் இழந்த நிலையில் தன் பங்களிப்பையும் மதிப்பை யும் தக்க வைக்கும் முனைப்புகள்தான் தற்கால ஆசிரியர்களின் சவால்கள். 

# கடைசியாக, இந்தியா இந்த நிலையில் கல்வியை நிர்வகித்தால் 2060-ல்தான் 100 சதவீத எழுத்தறிவு சாத்தியப்படும் என்கிறது யுனெஸ்கோ.

 மக்கள் தொகை இருந்தும் கல்வி, திறன் வளர்ப்பு மற்றும் வேலைப்பயிற்சியில் நாம் தவறவிட்டால் அதன் அதிர்வுகள் சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் தெறிக்கும். 

உயிரியலிலும் உயர் மதிப்பெண்

 

பிளஸ் 2 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் அதிகமாகப் பதைபதைக்கும் பாடம், உயிரியல்தான். இழக்க வாய்ப்புள்ள ஒற்றை மார்க்கூட, ஒருவரின் மருத்துவ மேல்படிப்பு கனவை இற்று போகச் செய்யலாம் என்பதே இதற்குக் காரணம். 

அதே வேளையில் சரியான திட்டமிடல் மற்றும் முயற்சிகள் வாயிலாக, பெற்றோரின் பல லட்சங்களை விழுங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிக்குப் பதிலாக அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கவும் அதிகம் அடித்தளமிடும் பாடம் உயிரியல்தான். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சுவாமி சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை தாவரவியல் ஆசிரியர் கே. ராஜேந்திரனும், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி விலங்கியல் முதுநிலை ஆசிரியை ஆர். அருட்ஜோதி ஆகியோர் உயிரியல் பாடத் தயாரிப்புக்கான குறிப்புகளை வழங்குகிறார்கள். 

சராசரி மாணவர்களுக்கு 
 
உயிரியலில் சராசரி மதிப்பெண்ணுடன் தேர்ச்சிக்கு முயலுபவர்களுக்கு விலங்கியலைவிட தாவரவியலே கைகொடுக்கும். தாவரவியல் மூலமே உயிரியல் தேர்ச்சியை முடிவு செய்யும் மாணவர்கள் அதிகம். இவர்கள், தாவரவியலில் 1 மற்றும் 5 ஆகிய 2 பாடங்களையும் முழுமையாகப் படிக்க வேண்டும். 

தாவரவியலில் மொத்தம் எழுத வேண்டிய 7 மூன்று மார்க் கேள்விகளில் முதல் பாடத்திலிருந்து 2, பாட எண் 5-லிருந்து 3 என 5 கேள்விகளை எதிர்பார்க்கலாம். முதல் பாடத்திலிருந்தே 5 மார்க் கட்டாய வினா இடம்பெறும். மேலும் பாட எண் 2, 3லிருந்து படம் வரைவது சார்ந்த தலா ஒரு 3 மார்க் கேள்வி இடம்பெறும். 

புத்தகப் பின்பகுதி வினாக்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவற்றில் உரிய திருப்புதல் மேற்கொண்டாலே 14 ஒரு மார்க் கேள்விகளில் 10-க்கு பதிலளிக்கலாம். செய்முறை தேர்வுக்கான வினாக்களில் கூடுதல் கவனம் செலுத்தினால், அவற்றிலிருந்தே 6 சோதனைகள் தொடர்பான வினாக்களில் ஒரு 5 மார்க் நிச்சயம் வரும். விலங்கியலைப் பொறுத்தவரை சராசரி மாணவர்கள் 2,3,4 ஆகிய பாடங்களைப் படித்தால் மட்டுமே சராசரி மதிப்பெண்களை எட்டலாம். 

1+3 தயாரிப்பு 
 
தொடர்புபடுத்திப் படிப்பதும் ஒப்பிட்டுப் படிப்பதும் குழப்பத்தைத் தவிர்க்கும். உதாரணத்துக்கு அப்ஜெக்டிவ் டைப் 1 மார்க் கேள்விகளைப் படிக்கும்போது, சரியான 1 விடை தவிர்த்து இதர 3 விடைகளுக்கும் உரிய கேள்விகளை உருவாக்கிப் படிக்க வேண்டும். 

இந்த வகையில் ஒரே நேரத்தில் 4 ஒரு மார்க் கேள்விகளுக்குத் திருப்புதல் மேற்கொள்ளலாம். அதேபோல ஒரு 10 மார்க் கேள்விக்குத் தயாராகும்போது அதில் 3 அல்லது 4 மூன்று மார்க் கேள்விக்கான பதில்கள் உள்ளடங்கி இருக்கும். அவற்றையும் கவனத்தில்கொண்டு படிப்பது சிறப்பான தயாரிப்பாக அமையும். 

ஒரு மார்க் அள்ள 
 
பொதுவாகப் பாடங்களில் தடித்த எழுத்துகளில் இடம்பெறுவதை மையமாகக் கொண்டு 1 மார்க் தயாரிப்பை மேற்கொண்டால், பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிதாக எதிர்கொள்ளலாம். தாவரவியலில் வருடங்கள் மற்றும் குரோமோசோம் எண்ணிக்கை தொடர்பான ஒரு 1 மார்க் கேள்வியும், அறிவியல் அறிஞர் அவரது நாடு மற்றும் எழுதிய புத்தகம் இவற்றிலிருந்து 1 ஒரு மார்க்கும் நிச்சயம் வரும். 

இவற்றில் தவறுகளைத் தவிர்க்கப் பாடங்களில் இருந்து தகவல்களை ஒரு தொகுப்பாக உருவாக்கித் திருப்புதல் மேற்கொள்ளலாம். 6-வது பாடத்திலிருந்து 2 ஒரு மார்க் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுவதால், அவற்றுக்குக் கூடுதல் கவனம் தரவேண்டும். தாவரவியல் புத்தகத்தின் கடைசி 5 பக்கங்களின் பொருளாதார முக்கியத்துவம் என்ற தலைப்பிலிருந்து ஒரு 1 மார்க் நிச்சயம் வரும். 

பொதுவாகப் பாடங்களில் தடித்த எழுத்துகளில் இடம்பெறுவதை மையமாகக் கொண்டு 1 மார்க் தயாரிப்பை மேற்கொண்டால், பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிதாக எதிர்கொள்ளலாம். தாவரவியலில் வருடங்கள் மற்றும் குரோமோசோம் எண்ணிக்கை தொடர்பான ஒரு 1 மார்க் கேள்வியும், அறிவியல் அறிஞர் அவரது நாடு மற்றும் எழுதிய புத்தகம் இவற்றிலிருந்து 1 ஒரு மார்க்கும் நிச்சயம் வரும். இவற்றில் தவறுகளைத் தவிர்க்கப் பாடங்களில் இருந்து தகவல்களை ஒரு தொகுப்பாக உருவாக்கித் திருப்புதல் மேற்கொள்ளலாம். 

6-வது பாடத்திலிருந்து 2 ஒரு மார்க் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுவதால், அவற்றுக்குக் கூடுதல் கவனம் தரவேண்டும். தாவரவியல் புத்தகத்தின் கடைசி 5 பக்கங்களின் பொருளாதார முக்கியத்துவம் என்ற தலைப்பிலிருந்து ஒரு 1 மார்க் நிச்சயம் வரும். 

விலங்கியலில் 1 மார்க்கைப் பொறுத்தவரை 7 பாடங்களையும் படித்தாக வேண்டும். 16 கேள்விகளில் 4 முதல் 6 ஒரு மார்க் மட்டுமே புத்தக வினாக்களில் இருந்து வரும். இதர கேள்விகள் புத்தகத்தின் உள்ளிருந்தே இடம்பெறும். 

குழப்பம் தவிர்ப்போம் 
 
உயிரியலில், ஒரு தேர்வு 2 விடைத்தாள்கள் என்பதிலேயே சிலருக்குப் பதட்டம் இருக்கும். தாவரவியலில் 7 மூன்று மார்க், 4 ஐந்து மார்க் வினாக்கள் இடம்பெறும். இதுவே விலங்கியலில் 8 மற்றும் 3 என அமையும். இந்தச் சாய்ஸ் வினாக்களின் எண்ணிக்கையில் அவசரத்தில் மறந்து, இரண்டுக்குமிடையே சிலர் மாற்றி எழுதிவிடுவார்கள். இந்தத் தடுமாற்றத்தைப் புரிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் அவற்றைத் தவிர்க்கலாம். 

தேர்வறையில் வழங்கப்படும் வினாத்தாள் வாசிப்பதற்கான நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தி, குழப்பம் மற்றும் நேர விரயத்துக்கு வாய்ப்பில்லாத கேள்விகளைத் தேர்வு செய்வது ஒரு கலை. திருப்புதல் தேர்வுகளில் இதிலும் உரிய பயிற்சி பெறுவது நல்லது. 

தாவரவியல் பாட எண்-5ல் ’எலெக்ட்ரான் கடத்து சங்கிலி’ வினாவை அது தொடர்பான பிற வினாக்களுடன் மாணவர்கள் குழப்பிக் கொள்வார்கள். 

3 மார்க்கில் இரு சொல் பெயரிடும் முறை, பல சொல் பெயரிடும் முறை ஆகியவற்றின் பதில்களை மாற்றி எழுதும் குழப்பமும் இதில் சேரும்.
முதல் பாடத்தில் இடம்பெறும் 4 குடும்பங்கள் தொடர்பான 10 மார்க் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், ஒரு பாயிண்ட் குறைவாக எழுதுவதைவிட, குடும்பங்கள் இடையேயான பாயிண்ட்களை மாற்றி எழுதுவதால் மார்க் இழப்பு ஏற்படும். 

அதேபோலப் படங்களை வரையும்போது ஒன்றிரண்டு பாகங்கள் குறிக்காது விட்டால்கூடப் பிரச்சினையில்லை. ஆனால், தவறாகக் குறிப்பதோ அல்லது கோடிட்டுவிட்டு அது குறித்து எழுதாமல் விடுவதோ நிச்சயம் மதிப்பெண் இழப்பை ஏற்படுத்தும். 

தாவரவியல் முதல் பாடத்தில் பொருளாதார முக்கியத்துவம் தலைப்பின் கீழ் விடையளிக்கையில் தாவரவியல் பெயர் மறந்தாலோ, குழம்பினாலோ வட்டாரப் பெயர்களை எழுதி மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கலாம். 

நேர விரயம் தவிர்க்க 
 
படம் வரைவதில் அதிக நேர விரயமாவதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாகத் தாவரவியலில் குடும்பங்கள் தொடர்பான கேள்விக்கு மலரின் வரைபடம் வரைந்தால் போதும். 

அது தொடர்பான ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை வரைந்து நேரத்தை வீணாக்கத் தேவையில்லை. 5 மார்க்கைப் பொறுத்தவரை படம் உண்டென்றால், வினாவில் கேட்காவிட்டாலும் வரைந்தாக வேண்டும். 

3 மார்க்கில் படம் குறித்துக் கேட்டால் மட்டுமே படம் வரைய வேண்டும். 


’விவரி, என்றால் என்ன?, குறிப்பு வரைக...’ ஆகிய கேள்விகளுக்கு மட்டுமே வாக்கியங்களில் விடையளிக்கலாம். மற்றபடி கேட்ட கேள்விக்கான பதில் என்னவோ, அதை ஒரு சில வார்த்தைகளில் எழுதி முடிப்பது நேர விரயத்தைத் தவிர்க்கும். தாவரவியல், விலங்கியல் பெயர்களைப் படிப்பதோடு எழுதியும் பார்க்க வேண்டும். 


ஒப்பீட்டளவில் தாவரவியல் எளிது என்பதால், அதை விரைவாக முடித்துவிட்டு மிச்சமாகும் நேரத்தை விலங்கியலுக்கு அளிக்கலாம். ஆனால், திருப்புதல் தேர்வுகளில் இதைத் தவிர்த்துவிட்டு 1.30 மணி நேரத்தில் விலங்கியலை முடிக்க முயற்சிக்கலாம். 1 மற்றும் 3 மார்க்குக்கு அரை மணி நேரம், 5 மற்றும் 10 மார்க் பகுதிகளுக்குத் தலா அரை மணி நேரம் எனப் பயிற்சியில் முயற்சிக்க வேண்டும்