காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில், கல்லூரி மற்றும் மாணவர் மேம்பாட்டுக்காக முன்னாள் மாணவர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் செயல்படும் புதுச்சேரி அரசு கல்வி நிறுவனமான பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் (அலும்னி அசோசியேஷன்) முதலாமாண்டாக தொடங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பி.தம்பிதுரை தலைமை வகித்து, கல்லூரியில் கல்வி முடிந்து வெளியேறிய முன்னாள் மாணவர்களிடையே புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு ஏற்பாடு செய்தார். இதன்படி தலைவராக கோ.திணேஷ்குநாத், துணைத் தலைவராக கே.வேலுமணி, பொதுச்செயலராக எஸ்.சதீஷ்குமார், இணை செயலராக எஸ்.ராஜரூ, பொருளாளராக டி.சரண்யா மற்றும் செயற்குழு உறுப்பினராக 7 பேர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பேசும்போது, பொறியியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டவேண்டும். தாற்காலிக கட்டடத்தில் கல்வி பயின்று வெளியேறிய மாணவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். பயிலும் மாணவர்கள் அச்சிரமத்தை சந்திக்காதிருக்க நிரந்தர கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்லூரியில் வேலைவாய்ப்புக்குரிய புதிய பாடப் பிரிவுகள் தொடங்கவேண்டும். முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில், மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தால் பயிற்சி அளிக்கவேண்டும். சிறந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும். நூலகத்தில் தரமான நூல்களை வாங்கிவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினராக இருப்பர். கல்லூரியில் பயிலும் மாணவர்கள், கல்வி முடிந்து வெளியேறும் மாணவர்களுக்கு, மூத்த மாணவர்கள் துணையாக இருக்கவேண்டும். உயர்கல்வி, வேலைவாய்ப்புக்குரிய ஆலோசனைகள் வழங்கவேண்டுமென கல்லூரி முதல்வர் பி.தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தார்.
கல்லூரி பேராசிரியர்கள் பி.குமார், எம்.ஆராமுதன், கல்லூரி முதுநிலை கணக்கு அலுவலர் துரைராஜன், கல்லூரி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோபிநாத் உள்ளிட்டோர் மாணவர் சங்க நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.
No comments:
Post a Comment