Thursday, 1 January 2015

“ஷார்ப்” பரப்பும் மென்திறன்

 
 
கல்வியில் கில்லியாக இருந்தாலும், வேலைவாய்ப்பு என்று வரும்போது தென்மாவட்ட இளைஞர்கள் பின்தள்ளப்பட்டு விடுகிறார்கள். இதை உணர்ந்து இப்போது தென்மாவட்டப் பொறியியல் கல்லூரிகளில் எல்லாம் தகவல் தொடர்பு திறன்களைக் கற்றுத்தர ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், கலை அறிவியல் பயிலும் மாணவர்களின் கதி? 

இவர்களுக்காகவே தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் சார்பில் மதுரையில் தொடங்கப்பட்ட அமைப்புதான் ஷார்ப். 5 ஆண்டுகளுக்கு முன்பு கலைக் கல்லூரிகள் தோறும் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்த இந்த அமைப்பு, இப்போது முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று கெடுபிடி காட்டும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. 

இதனை வெற்றிகரமாக சுபப்ரியா பிரபாகரன் ஒருங்கிணைத்து வருகிறார். “பொதுவாகக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெறுவதற்கான பாடங்கள் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, வேலையில் முன்னேறவோ, தொழில், வணிகத்தில் ஈடுபடவோ கற்பிக்கப்படுவதில்லை. இந்தக் குறைபாட்டினை நீக்கி, மாணவர்களின் ஆற்றலைக் கூர்மைப்படுத்தத்தான் இந்த ஷார்ப் மையம் தொடங்கப்பட்டது” என்கிறார் அவர். 

“ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கைக்கும், வேலைவாய்ப்புக்கும் உதவுகிற முக்கியமான விஷயங்களாக வரையறுக்கப்பட்டுள்ள கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், தன்னை அறிதல், தெளிவான இலக்கை நிர்ணயித்தல், குழு மனப்பான்மை, நேர மேலாண்மை, மற்றவர்கள் இடத்தில் வைத்துத் தன்னைப் பாவித்தல், மற்றவர்களைப் பாராட்டுதல், தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, உணர்ச்சிகளையும், கோபத்தையும் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவற்றைக் கற்றுத் தருகிறோம்” என்றும் தெரிவிக்கிற அவர், இந்தக் கருத்துகளைத் தங்கள் அனுபவங்களில் இருந்தே எடுத்துச் சொல்லக்கூடிய தொழில்துறையினர், வெற்றியாளர்கள் போன்ற ஆளுமைகளை அழைத்துப் பேச வைக்கிறோம். 

இக்கருத்துகளை எல்லாம் சுவாரஸ்யமாகக் கற்றுத் தரும் வகையில் ஞாநி, லேனா தமிழ்வாணன், சோமவள்ளியப்பன், வரலொட்டி ரங்கசாமி, மனுஷ்யபுத்திரன் போன்ற பல எழுத்தாளர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த அமைப்பு மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மதுரையில் 1200 கல்லூரி மாணவர்களுக்கும், 3000 பள்ளி மாணவர்களுக்கும் மென்திறன் பயிற்சி அளித்துள்ளோம்” என்று பெருமிதம் கொள்கிறார். 

இந்த அமைப்பைத் தென்மாவட்டங்கள் முழுக்க விரிவுபடுத்தும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டபோது, “பள்ளி, கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் இந்த மென்திறன் பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம். மதுரை மாவட்டத்தில் 9, 10- ம் வகுப்பு படிக்கும் மாணவிகளே சுமார் 2 லட்சம் பேர் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதுதான் என்னுடைய இப்போதைய இலக்கு” என்கிறார் சுபப்ரியா பிரபாகரன்.

No comments:

Post a Comment