Tuesday, 28 October 2014

கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!

கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!

 

 

கணக்கு என்றாலே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் கசப்புதான் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கணக்குகளை எளிமையாகக் செய்து பார்த்திட உதவ ஓர் இணையதளம் இருக்கிறது.
இந்த இணையதளத்தில் பரப்பளவு (Area), புள்ளியியல் (Statistics), முக்கோணவியல் (Trigonometry), பகுப்பாய்வு வடிவியல் (Analytical Geometry), எண்கள் (Numbers), அணிகள் (Matrix), இயற்கணிதம் (Algebra), மாற்றிகள் (Conversions), நிற மாற்றிகள் (Colour Converters), நாள் மற்றும் கிழமை (Date and Day), அடமானம் (Mortgage), அலகு மாற்றங்கள் (Unit Conversions), மாற்றக் காரணிகள் (Conversion Factors), உடல்நலம் (Health), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), வானிலை (Weather), மருத்துவம் (Medical), இயந்திரவியல் (Mechanical), மேலான கணக்கீட்டு கருவிகள் (Top Calculators) எனும் முதன்மைத் தலைப்புகள் உள்ளன.
வடிவக் கணக்குகள்
பரப்பளவு எனும் தலைப்பில் சொடுக்கினால் சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம், நாற்கரம் எனப் பல வடிவங்களுக்கான எளிமையான கணக்கீட்டு கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நமக்குத் தேவையான வடிவத்தினைத் தேர்வு செய்தால் அந்த வடிவத்திற்கான சில கணக்கீட்டு முறைகள் அதற்கான வழிமுறைகள் (Formula) உடன் கிடைக்கிறது.
புள்ளியியல் எனும் தலைப்பில் சொடுக்கினால் புள்ளியியல் தொடர்பான பல்வேறு கணக்கீட்டுக் கருவிகள் கிடைக்கின்றன. இந்தக் கருவிகளில் நமக்குத் தேவையான கணக்கீட்டுக் கருவியைத் தேர்வு செய்து சொடுக்கினால் கிடைக்கும் கணக்கீட்டுக் கருவியின் கீழுள்ள காலிப்பெட்டியில் நம்மிடமுள்ள அளவீடுகளை உள்ளீடு செய்து நமக்குத் தேவையான விடையை உடனடியாகப் பெற முடியும்.
எண் கணிதம்
எண்கள் எனும் தலைப்பில் சொடுக்கினால் எண்கள் தொடர்பான கணக்குகளுக்கான பல கணக்கீட்டு கருவிகள் கிடைக்கின்றன. வர்க்கமூலம் (Square Root), சதவிகிதம் (Percentage), தசமப் பின்னம் (Decimal Fraction), மறுநிகழ்வுப் பின்னம் (Recurring Fraction), மடக்கைக் கணக்கீட்டு கருவி (Logarithmic Calculator), கூட்டு வட்டி (Compound Interest), ரோமானிய எண்கள் (Roman Numbers), தங்க விகிதக் கணக்கீட்டு கருவி (Golden Ratio Calculator) என்பது போன்று பல தலைப்புகளில் கணக்கீட்டு கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்கீட்டு கருவிகளில் தேவையானதைத் தேர்வு செய்து அதற்குள் இருக்கும் காலிப்பெட்டிகளில் நம்மிடமுள்ள அளவுகளை உள்ளீடு செய்து அதற்கான விடையைப் பெறலாம்.
வேடிக்கைக் கணக்குகள்
நிற மாற்றிகள் எனும் தலைப்பில் சொடுக்கினால் வேடிக்கைக் கணக்குகள் எனும் தலைப்பில் விலங்குகளின் வேகம் (Animal Speed), பீர் இழப்பு (Beer Loss) எனும் இரு கணக்கீட்டு கருவிகள் கிடைக்கின்றன. இதில் விலங்குகளின் வேகம் எனும் கணக்கீட்டு கருவியில் சொடுக்கினால் தூரம் எனும் தலைப்பில் ஒரு காலிப்பெட்டி கிடைக்கிறது. இதனருகில் மைல், கிலோமீட்டர், மீட்டர் எனும் அளவுகள் கொடுக்கப் பட்டுள்ளன.
காலிப்பெட்டியில் தூரத்தினை உள்ளீடு செய்து அதற்குரிய அளவையும் தேர்வு செய்து கீழுள்ள முடிவு எனும் பொத்தானை அழுத்தினால் சிங்கம், சிறுத்தைப் புலி, டயனோசர், யானை, வரிக்குதிரை, முயல், கங்காரு, பூனை, நரி, அணில், பன்றி, ஆமை, நத்தை, எறும்பு ஆகியவைகளின் பெயர்கள் கொண்ட பட்டியல் இடம் பெற்றுள்ளது. இதன் வலப்புறம் பட்டியலில் குறிப்பிட்டுள்ள விலங்குகள் உள்ளீடு செய்த தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் காலம் மணி: நிமிடம்: வினாடி: மி.வினாடி எனும் அளவுகளில் தரப்பட்டுள்ளன. அதற்கடுத்து ஒவ்வொரு விலங்கும் சராசரியாக ஒரு மணி நேரத்தில் கடக்க எடுத்துக் கொண்ட தொலைவும், அதற்கடுத்து விலங்குகள் ஓட்டத்தில் பெற்ற இடத்தின் மதிப்பும் தரப்பட்டுள்ளன. பீர் இழப்பு எனும் தலைப்பில் சொடுக்கி அதில் கேட்கப்பட்டுள்ள அளவீடுகளை உள்ளீடு செய்து முடிவுக்கான பொத்தானை அழுத்தினால் விலை வடிவிலான இழப்புகள், வாரம், மாதம் கால அளவுகளிலான இழப்புகள் மற்றும் மொத்த இழப்புகள் போன்றவை கிடைக்கின்றன.
இதுபோல முக்கோணவியல், பகுப்பாய்வு வடிவியல், அணிகள், இயற்கணிதம், மாற்றிகள் எனும் தலைப்புகளிலும் கணக்கீட்டுக் கருவிகள் கிடைக்கின்றன. தேவையான கணக்கீட்டுக் கருவியைத் தேர்வு செய்து அங்குள்ள காலிப்பெட்டிகளில் நம்மிடம் உள்ள அளவுகளை உள்ளீடு செய்து நமக்குத் தேவையான விடையைப் பெற முடியும்.
மொத்தத்தில் இந்த இணைய தளம் பல்வேறு கணக்கீட்டுக் கருவிகளைக் கொண்டு அனைவருக்கும் பயன் தருவதாக உள்ளது. இந்த இணையதளத்திற்குச் செல்ல http://easycalculation.com/ எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தலாம்.

 

Monday, 20 October 2014

ஆயிரம் = தாமரை, நூறு ஆயிரம் = தவளைக்குஞ்சு: கணிதத்தின் கதை

ஆயிரம் = தாமரை, நூறு ஆயிரம் = தவளைக்குஞ்சு: கணிதத்தின் கதை

 

மனிதர்கள் முதலில் எண்ணிக்கையைத் தெரிந்துகொண்டனர். எண்ணி , எண்ணிப் பார்த்ததை ஏதாவது ஒரு வடிவத்தில் குறித்து வைக்க வேண்டுமே என்ற தவிப்பு ஏற்படாதா? தவியாய் தவித்தார்கள். அந்தத் தவிப்பின் குழந்தைகள்தான் எண்கள். 

உலகம் முழுவதும் பல மனிதக் குழுக்கள் வாழ்ந்தன. அவர்களுக்கு உள்ளே பலவகையான எண் உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றிலும் ஒன்று முதல் ஒன்பது வரையான எண்கள் பொதுவாக, விரல்களின் உருவங்களாகவே முதலில் உருவாகின. 

தாமரையும் தவளையும் 
 

ஏராளமாக இருக்கிற பொருள்களுக்கு எதை எல்லாம் உருவமாக வைக்கலாம் என அதன் பிறகு மனிதர்கள் தேடினார்கள். 

ஆயிரம் = தாமரை, நூறு ஆயிரம் = தவளைக்குஞ்சு
1800 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்கக் கண்டத்தில் மாயன் இந்தியர்களின் நாகரிகம் இருந்தது.அந்த மக்கள் கைகளோடு கால்களையும் சேர்த்து எண்ணுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம். ஐரோப்பியர்களின் எண்ணிக்கை எப்படி 10 ஐ அடிப்படையாகக் கொண்டு அமைந்ததைப்போல, மாயன் இந்தியர்களின் எண்ணிக்கை முறை 20 ஐ அடிப்படையாகக் கொண்டு இருந்தது.அவர்களின் எண்கள் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டதாக இருந்தது. 

ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முன்னால், இந்தியர்களாகிய நாம் பயன்படுத்திய எண்களின் உருவங்கள்தான் சில மாற்றங்களுக்கு உள்ளாகி இன்றும் உலகில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

ஏராளமாக இருக்கிற பொருள்களுக்கு எதை எல்லாம் உருவமாக வைக்கலாம் என அதன் பிறகு மனிதர்கள் தேடினார்கள். 

5000 வருடங்களுக்கு முன்னால் எகிப்து நாட்டில் ஓடிய நைல் நதியில் ஆயிரக்கணக்கில் தாமரைகள் இருந்தன. பல்லாயிரக்கணக்கில் தவளைகள் இருந்தன. அந்தத் தவளைகள் எல்லாம் குஞ்சுகள் பொரித்தால் பல்லாயிரங்களாய்ப் பெருகி நதியை நிறைத்தன. தங்களின் கண்கள் முன்னால் ஏராளமாக இருந்தவற்றிலிருந்து எகிப்தியர்கள் தங்களின் எண் உருவத்தை தேர்ந்தெடுத்தனர். 

ஒரு ஆயிரம் என்றால் ஒரு தாமரை. நூறு ஆயிரம் என்றால் ஒரு தவளைக்குஞ்சு என்று உருவங்களைப் பயன்படுத்தினர்.
ஒரு ஆயிரம் என்றால் ஒரு தாமரை. நூறு ஆயிரம் என்றால் ஒரு தவளைக்குஞ்சு என்று உருவங்களைப் பயன்படுத்தினர். 

அம்புமுனை, எழுத்து, புள்ளிகள் பாபிலோனியாவில் 5000 வருடங்களுக்கு முன்னால் அம்பு முனைகளின் உருவங்கள் எண்களாகப் பயன்பட்டன. 


2500 வருடங்களுக்கு முன்னால் கிரேக்கர்கள் தங்கள் மொழியின் எழுத்துக்களையே எண்களின் உருவங்களாகப் பயன்படுத்தினர். 

1800 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்கக் கண்டத்தில் மாயன் இந்தியர்களின் நாகரிகம் இருந்தது.அந்த மக்கள் கைகளோடு கால்களையும் சேர்த்து எண்ணுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம். ஐரோப்பியர்களின் எண்ணிக்கை எப்படி 10 ஐ அடிப்படையாகக் கொண்டு அமைந்ததைப்போல, மாயன் இந்தியர்களின் எண்ணிக்கை முறை 20 ஐ அடிப்படையாகக் கொண்டு இருந்தது.அவர்களின் எண்கள் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டதாக இருந்தது.

Wednesday, 15 October 2014

எண் சட்டம் எனும் அபாகஸ்

எண் சட்டம் எனும் அபாகஸ்

 

 பழங்கால ரோமானிய அபாகஸ்

 பழங்கால சீன அபாகஸ்

நீங்கள் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த ஒரு தானிய வியாபாரி என நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குடோனில் 45 பக்கெட்டுகளில் தானியம் இருக்கிறது. இன்னொரு 43 பக்கெட்டுகளை விலைக்கு வாங்கி இருக்கிறீர்கள். இரண்டையும் சேர்த்து எப்படி கணக்கிடுவீர்கள்?
இன்றைய காலகட்டமாக இருந்தால் மனக்கணக்காக சொல்லி விடுவீர்கள். அதற்கான கணித பலம் உங்களின் மூளைக்குக் காலத்தின்போக்கில் ஏற்பட்டுள்ளது. உங்களின் மூளை இன்று அடைந்துள்ள வளர்ச்சிக்கு எத்தனை ஆண்டுகாலம் எத்தனைவிதமான பயிற்சிகள் தேவைப்பட்டுள்ளன? 

கோடுகளும் கற்களும்
 
அந்தக் காலத்தில் மண்ணில் இரண்டு நேர்க் கோடுகளை வரைந்தும் சில கற்களை வைத்துக்கொண்டும் மனிதர்கள் தங்களிடம் இருந்த பொருள்களை எண்ணிப் பார்த்து வந்துள்ளனர். அதன்படி மேலே சொன்ன இந்தக் கணக்கை நாம் போட்டு விடலாம்.
முதலில் வலது பக்கத்தில் உள்ள கோட்டில் நீங்கள் ஐந்து கற்களை வைக்க வேண்டும். இந்த ஐந்து கற்களும் ஐந்து ஒன்றுகளை குறிக்கும். இடது பக்கத்தில் உள்ள கோட்டில் நீங்கள் நான்கு கற்களை வைக்க வேண்டும். அந்த கற்கள் ஒவ்வொன்றும் 10 என்ற எண்ணைக் குறிக்கும். இரண்டு கோடுகளிலும் உள்ள கற்களை எண்ணினால் உங்களிடம் குடோனில் இருக்கிற 45 பக்கெட்டுகளை குறித்துக்கொண்டீர்கள்.
இந்த கோடுகளில் ஒன்றுக்களின் கோட்டில் மூன்று கற்களை அதிகப்படுத்தியும், பத்துக்களின் கோட்டில் நான்கு கற்களை அதிகப்படுத்தியும் நீங்கள் புதிதாக வாங்கிய 43 பக்கெட்டுகள் தானியத்தை கூட்டிப்பார்க்கலாம். இப்போது மொத்தமாக கூட்டினால் 88 பக்கெட்டுகள் வருகிறது. ஆக, நீங்கள் உங்களிடம் இப்போது இருக்கிற தானியப் பக்கெட்டுகள் எவ்வளவு என்பதை தெரிந்து கொண்டீர்கள். 

எண் சட்டம்
 
கொஞ்ச காலம் சென்றது. மணலில் கோடுகள் கிழிக்காமல் கற்களை வைத்தே எண்ணிப் பார்க்க மக்கள் கற்றுக்கொண்டார்கள். அதற்குப் பிறகு ஒரு மரச்சட்டத்தில் இரண்டு கயிறுகளையோ, கம்பிகளையோ கட்டி அவற்றில் கற்களையோ, கற்களைப்போன்ற பாசிகளையோ கோத்து எண்ணிப் பார்ப்பதற்கான எண் சட்டம் எனும் இயந்திரத்தை அவர்கள் உருவாக்கினார்கள்.
கி.மு. 300 -ம் ஆண்டில் சலவைக்கல்லால் ஆன கணிதப் பலகை ஒன்று பாபிலோனியரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பலகையில் பல கோடுகள் வரையப்பட்டு, அக்கோடுகளுக்கிடையில் சிறு கோலிகளை உபயோகித்துக் கணித அளவீடுகளைக் கணித்தார்கள். இது பரவலாக எகிப்து, ரோம், கிரீஸ், இந்தியா உட்பட பல பண்டைய நாகரிகங்களால் உபயோகப்படுத்தப்பட்டது. இதனை நாம் இப்போதும் ஏதன்ஸ் நகரில் உள்ள அரும்பொருட்காட்சிச் சாலையில் பார்க்க முடியும்.
உலகின் பலபகுதிகளில் உருவான அந்த எண் சட்டம்தான் தற்போது அபாகஸ் என்ற பெயரில் இன்னமும் பல நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது.
இந்த எண் சட்டத்துக்குப் பிறகுதான் எண்ணிக்கையை எழுதி வைக்க வேண்டிய தேவை மனிதர்களுக்கு ஏற்பட்டது. அதன்பிறகுதான் எண்கள் பிறந்தன.

 

பேச்சு பேச்சா இருந்தா போதுமா?

பேச்சு பேச்சா இருந்தா போதுமா?

 

 

நான் 1 ரூபாய் கொடுத்தாலே 1000 ரூபாய்க்குப் பேசுவேனே! என்கிற டைப்பா நீங்கள்?
தகர டப்பா, வாயாடி, ஓட்டை வாய் போன்ற பட்ட பெயர்கள் உங்களுக்கு இருக்கா? நீ பேச ஆரம்பிச்சா பிறகு நிப்பாட்டுறது ரொம்ப கஷ்டமாச்சே!’ னு நண்பர்கள் உங்களைக் கேலி செய்கிறார்களா?
அதை வைத்து உங்களைச் சிறந்த மொழித்திறனாளி எனச் சொல்ல முடியாது. மொழியைப் பயன்படுத்துவதில் கூடுதல் திறமையோடு இருக்கிறீர்கள் என்று சொல்லலாம். ஆனால் சிறப்பான மொழித்திறனாளி என்பதற்கும் அதற்கும் ரொம்ப ரொம்ப தூரம்.
மொழியைச் சிறப்பாகப் பயன்படுத்தியதற்கான சிறப்பான உதாரணத்துக்கு நீங்கள் பார்க்க வேண்டியது உலகப் புகழ் பெற்ற நகைச்சுவைக் கலைஞர் சார்லி சாப்ளினின் முதல் பேசும் படமான ‘தி கிரேட் டிக்டேட்டர்’. 

மவுனத்தின் மொழி
 
மொழி குறித்த எனது புரிதலைப் புரட்டிப்போட்ட படம் அது. 100 வருடங்களுக்கு முன்பே படங்களை எடுத்தவர் சாப்ளின். பேசும் படங்கள் வந்த பின்பும் மவுனப் படங்கள் எடுத்தார். சினிமாவில் காட்சிகள் பேச வேண்டும், வசனங்கள் அல்ல என்பார் அவர். 

ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் தனது படைபலத்தால் உலகை அச்சுறுத்திய காலம். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரை நையாண்டி செய்தவர் சாப்ளின். 

முதல் பேசும் படம்
 
அவரது முதல் பேசும் படம் ‘தி கிரேட் டிக்டேட்டர். அதில் ஹிட்லராகவும் யூத இனத்தைச் சேர்ந்த சவரத் தொழிலாளியாகவும் இரண்டு வேடங்களில் நடித்து சாப்ளின் நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைப்பார். தன் வெத்துப் பேச்சால் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருப்பவர் ஹிட்லர் என கேலியோடு, நகைச்சுவை ததும்ப சித்தரித்திருப்பார். 

சினிமா என்னும் வலிமையான மொழியைக் கொண்டு போரையும், அதிகார வெறியையும், இனவெறியையும் சாப்ளின் கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாக்கினார். 

பிதற்றலின் மொழி
 
ஹிட்லர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது போல் ஒரு காட்சி. அதில் ஹிட்லர் பேசுவது ஒரு மொழியே அல்ல. ஹ, ப்ப, பூ, ஹூ, ஷ, ஹீ எனும் வெறும் சப்தங்கள்தான். அவர் பேசவில்லை, பிதற்றுகிறார் என்பதைக் கேலியாகக் காட்டுவதற்காகக் காட்சி அப்படி அமைக்கப்பட்டிருக்கும்.
கடைசியில் ஹிட்லர் வேஷத்தில் இருக்கும் யூத சவரத் தொழிலாளி மேடை ஏறி உலக மக்களிடம் உரையாற்றும் காட்சி வரும். அதுவரை விழுந்து விழுந்து சிரித்த அனைவரையும் உறையவைக்கும் காட்சி அது.
“என்னை மன்னியுங்கள், நான் பேரரசனாக விரும்பவில்லை. யாரையும் அதிகாரம் செய்வது என் நோக்கம் அல்ல…. நாம் அதிகம் சிந்திக்கிறோம். ஆனால் குறைவாக நேசிக்கிறோம். புத்திசாலித்தனத்தை விடவும் நமக்குத் தேவை மனிதநேயமே. ஜனநாயகத்தின் பெயரால் நாம் இணைவோம். விரோதம் விடுத்து அன்பு கொள்வோம்” என உரை நிகழ்த்துவார் சாப்ளின். 

இது தான் மொழி

 
எப்போதுமே கோமாளியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் சாப்ளினுக்குள் இத்தனை ஆழ்ந்த சிந்தனை இருக்கிறதா? என பிரமிப்பூட்டும் காட்சி அது. கிட்டத்தட்ட 4½ நிமிடங்கள் தொடர்ந்து நிதானமான குரலில் பேசுவார்.
அவர் கண்கள் சின்ன சிமிட்டல்கூட இல்லாமல் கூர்மையாக இருக்கும். இது வெறும் வசனமல்ல. சாப்ளினின் ஆன்மாவின் குரலாகத் தோன்றும். எதை வேண்டுமானாலும் பேசுவது அல்ல மொழி, அர்த்தமுள்ள பேச்சு மட்டுமே மொழி என்று அந்தக் காட்சி எனக்கு உணர்த்தியது. 

அதையும் தாண்டி சக்திவாய்ந்தது
 
பேச்சு என்பது வெறும் பேச்சாக இருந்தால் மட்டும் போதாது. திறன் வேறு திறமை வேறு. படபடவெனப் பேசவும், எழுதவும் உங்களால் முடிந்தாலும், சுய புத்தியில்லாமல் சொன்னதை சொல்லும் கிளிப் பிள்ளையாக வெளிப்படுத்துவது திறன் மட்டுமே. ஆனால் மொழியின் வெவ்வேறு பரிமாணங்களை உள்வாங்கிக் கொள்ளும்போது உங்கள் திறனை திறமையாக மாற்ற முடியும். மொழி அத்தனை சக்தி வாய்ந்தது. 

அதன் முதல் படி, கற்றல் பல்வேறு விதங்களில் நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அமெரிக்க உளவியல் நிபுணர் கார்ட்னர். “வகுப்பில் ஆசிரியர் விரிவுரை நிகழ்த்துவார். பின்னர் அதே விஷயங்களைப் பாடப் புத்தகங்களில் படிக்க வேண்டும். படித்தவற்றை நினைவில் வைத்து பரீட்சை எழுத வேண்டும். இப்படித்தான் கல்வி கற்க முடியும் என்னும் அபத்தமான மூட நம்பிக்கை நம்மிடையே நிலவுகிறது.” என்று விமர்சிக்கிறார் அவர். 

நமது மொழித் திறனை வளப்படுத்த அவர் முன்மொழியும் வழிகள் இவை:
# வார்த்தை விளையாட்டுகள்.
# குழுவாக இணைந்து கதை எழுதுதல்
# புதிய சொற்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்ளல்,
# அன்புக்குரியவர்களுக்குக் கடிதம் எழுதுதல்,
# உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரோடு வெவ்வேறு சமூகம் சார்ந்த விஷயங்களை விவாதித்தல்.
# நகைச்சுவையோடும், விமர்சனத்தோடும் சினிமா, உணவகங்கள், புத்தகங்கள் பற்றி எழுதுதல் .
# பலவித புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள் வாசித்தல்.
# பத்திரிகைகளுக்குக் கதை, கட்டுரைகளை எழுதுதல்.
# பள்ளியில், கல்லூரியில் வளாகப் பத்திரிகையை ஆரம்பித்தல்.
# இணையத்தில் பத்திரிகை, வலைப்பூ (blog) தொடங்குதல்.
கார்ட்னர் பரிந்துரைக்கும் விதங்களில் நீங்கள் மொழியோடு விளையாடத் தொடங்கினால், ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். அதாவது, மொழி என்பது ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள உதவும் ஊடகம் மட்டுமல்ல. அது நம் கடந்த காலத்தையும் எதிர் காலத்தைத் தொடர்புபடுத்தும் மிக நீண்ட வரலாற்றுப் பாலமும்கூட. கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, தொழில் நுட்பம் என அனைத்தையும் தாங்கிச் செல்லும் கப்பல் மொழி. அத்தகைய மொழியைப் பரந்து விரிந்த பார்வையின் அடிப்படையில் உள்வாங்கிக் கொண்டு பின்னர் வெளிப்படுத்தினால் உங்களாலும் இவ்வுலகைப் புரட்டிப்போட முடியும்.

தமிழ் கற்க உதவித்தொகை

தமிழ் கற்க உதவித்தொகை

 

பழந்தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் சார்ந்த ஆய்வு மாணவர்களுக்கும், அறிஞர்களுக்கும், தமிழ் முதுகலை மாணவர்களுக்கும் பல்வேறு நிதித் திட்டங்களையும் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வழங்கி வருகிறது.
தமிழ் மொழி, செம்மொழியாக 2004-ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
2009-ம் ஆண்டு ஜனவரி முதல், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் எனும் ஒரு தன்னாட்சி நிறுவனம் சென்னை தரமணியில் தமிழ் ஆய்வுக்காகச் செயல்பட்டு வருகிறது. 

42 ஆயிரம் நூல்கள்
 
தொல்பழங்காலம் தொடங்கி கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களை முன்வைத்து ஆய்வு, பதிப்பு மற்றும் மொழிபெயர்ப்புப் பணிகளை வரையறை செய்துள்ளது இந்த மையம். இங்கே தொல்பழங்காலம் முதல் ஆறாம் நூற்றாண்டு வரையிலான 41 இலக்கிய, இலக்கண நூல்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தான் அவை.
இந்த மையத்தின் நூலகத்தில் அரிய நூல்கள் 20 ஆயிரம் உட்பட 42 ஆயிரம் நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் செம்மொழி நூல்களின் பழஞ்சுவடிகளையும், அவற்றின் மைக்ரோ பிலிம் நகல்களையும் சேகரிக்க சுவடிக் காப்பகமும் இங்கே உள்ளது. 

இணையவழி படிப்பு
 
சங்க இலக்கியப் பாடல்களில் ஆர்வம் இருக்கும் யாரும் http://www.cict.in –ன் வாயிலாக பாடங்களை இலவசமாகக் கற்கமுடியும். ஆசிரியர்கள் பாடல்களையும் பாடல் பொருளையும் எளிமையாகச் சொல்வார்கள். அகப்பாடல்கள் முழுவதும் பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சீக்கிரத்தில் புறப்பாடல்கள் தொகுக்கப்பட உள்ளன. 

முதுகலை மாணவர்களுக்கு
 
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலைச் செம்மொழித் தமிழ் எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும், ஆண்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் பிற செலவினங் களுக்கும் வழங்கப்படுகிறது. 

ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை
 
சங்க இலக்கிய, இலக்கண நூல்களில் ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு 30 பேர் எடுக்கப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு முறையாகப் பயிற்சி இருக்கிறதா என்பதைப் பார்க்க ஒரு தேர்வு நடக்கும். அந்த மாணவர்கள் இந்தியாவில் உள்ள எந்தப் பல்கலைக்கழகத்திலும் எந்த வழிகாட்டியின் கீழும் சங்க இலக்கியம் சார்ந்த ஆய்வுகளைச் செய்யலாம். மாதம் 12 ஆயிரம் கல்வி உதவித்தொகையும், ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் பிற செலவினங்களுக்காகவும் வழங்கப்படுகிறது. 

முனைவர் பட்ட மேலாய்வு செய்பவர்களுக்கு (இரண்டாண்டு)
 
மத்தியப் பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திலேயே முழுநேர ஆய்வுப்பணியில் ஈடுபடலாம். அவர்களுக்கு வழிகாட்ட பேராசிரியர்களும் உண்டு. இலக்கியம், மொழியியல், மானிடவியல், சமூகவியல், கல்வியியல், கல்வெட்டியல், தொல்பொருளியல், மெய்யியல் ஆகியவற்றில் ஏதேனும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நாற்பது வயதுக்குட்பட்ட வர்களாக இருக்க வேண்டும். மாதம் 18 ஆயிரம் :ரூபாயும், இதர செலவினங்களுக்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். 

குறுகிய கால ஆய்வுத் திட்டங்களுக்கு உதவித்தொகை
 
சங்க இலக்கியத்தை அடிப்படையாக கொண்ட பல்வேறு தனி ஆய்வுத் திட்டங்களைச் சமர்ப்பிக்கும் ஆய்வறிஞர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
பதிவாளர் முனைவர் மு.முத்துவேலு நம்மிடம் இதுபற்றிப் பேசும்போது, “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பாகத் தமிழகப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செம்மொழி இலக்கியங்கள் தொடர் பாக நடத்தப்படும் கருத்தரங்கங்களுக்கும், பயிலரங்குகளுக்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தக் கருத்தரங்குகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டதன் பலனையும் நேரடியாகப் பார்க்க முடிகிறது. 2008-2009-ல் செம்மொழி இலக்கியம் தொடர்பாக பல்கலைக்கழகங்களில் பிஎச்டி பதிவுசெய்தவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக இருந்தது. இப்போது 45 சதவீதமாக ஆகிவிட்டது. செம்மொழி இலக்கியங்கள் மீதான ஆர்வம் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் தற்போது அதிகரித்துள்ளது. செம்மொழி இலக்கியங்களில் ஆய்வுசெய்வதற்கான சாத்தியங்கள் ஏராளமாக இருப்பதை இக்கருத்தரங்குகள் வழியாக அவர்கள் அறிந்துகொண்டுள்ளனர் என்கிறார். 


 


தொடர்புக்கு:
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சாலை போக்குவரத்து நிறுவன வளாகம், 40,100 அடி சாலை, தரமணி, சென்னை 600113.
தொலைபேசி: 044 – 22540124
Email: info@cict.in

 

கெஸ்டோ அகாடமியின் தொழிற்படிப்புகள்

கெஸ்டோ அகாடமியின் தொழிற்படிப்புகள்

 

 

 

வேகமாக வளர்ச்சி அடையும் துறைகளில் சமையல் கலையும், விருந்தோம்பல் துறையும் ஒன்று. அந்த துறையில் நுழைவதற்கான படிப்புகளை கெஸ்டோ சமையல் மற்றும் விருந்தோம்பல் அகாடமி உங்களுக்கு வழங்குகிறது.
ஹோட்டல் மேலாண்மை மற்றும் விருந்தோம்பல் பற்றிய தொழிற்படிப்புகளை கெஸ்டோ அகாடமி வழங்குகிறது. உலகத்தரத்தை கடைபிடிப்பதற்கு வழங்கப்படும் விருதான சர்வதேச நட்சத்திர விருதை 2012-ல் பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச வணிக முன்முயற்சிகள் பற்றிய மாநாட்டில் கெஸ்டோ அகாடமி பெற்றுள்ளது.
இந்திய மற்றும் சர்வதேச தகுதிகளை தங்களின் மாணவர்களுக்கு கெஸ்டோ அகாடமி வழங்குகிறது. விருந்தோம்பலிலும் சமையல் அறிவியலிலும் கெஸ்டோ அகாடமி நடத்துகிற பி.எஸ்ஸி மற்றும் எம்பிஏ படிப்புகளை இந்தியாவின் பல்கலைகழக மானியக்குழு அங்கீகரித்துள்ளது. துபாயில் உள்ள சர்வதேச சமையல் கலைகள் மையத்தோடு இணைந்து இரட்டை வேலைவாய்ப்பு திட்டத்தையும் அது வழங்குகிறது. கெஸ்டோவில் பயிற்சி பெற்றவர்கள் பிரபல பன்னாட்டு நிறுவனங்களில் பணியில் அமர்ந்துள்ளனர். 2012, மற்றும் 2013 ஆகிய இரு ஆண்டுகளில் 3 ஆயிரத்துக்கும் மேலானவர்களை இந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இந்திய அரசு அறிவித்துள்ள திறன் மேம்பாடு எனும் லட்சிய நோக்கத்துக்கு இந்தக் கம்பெனி தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது.இந்திய அரசு நிறுவனமான தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகத்தோடு இணைந்து கெஸ்டோ பணியாற்றுகிறது.
இந்த அமைப்பு வருகிற 2020 -க்குள் நாடு முழுவதும் 140 மையங்களை செயல்படுத்த உள்ளது. கெஸ்டோவின் அனைத்து மையங்களிலும் தொழில்தரமுள்ள சமைய லறைகள்,ரெஸ்டாரண்டுகள், ஹவுஸ் கீப்பிங் ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றுக்கான தொழில்நுட்பங்கள் பயிற்றுவிக்கப்படும். அவற்றைப் பயிற்றுவிப்போர் இந்தத் துறையில் அனுபவமிக்கவர்களாக இருப்பார்கள்.
பணிக்கு அமர்த்துவதில் ஒரு சாதனையை செய்துள்ளதற்காக கெஸ்டோ அகாடமி பெருமிதம் கொள்கிறது. பணிக்கு தேவையானவர்களைத் தேர்ந்தெடுக்க கெஸ்டோ மிகவும் பொருத்தமான இடம். கெஸ்டோ அகாடமியின் மாணவர்கள் சர்வதேச அளவிலும் பல நாடுகளின் ஹோட்டல்களில் பணியாற்றுகிறார்கள்.
ஏற்கெனவே பணியில் இருப்பதனால் கல்லூரிக்கு முழுநேரமாக வரமுடியாமல் இருப்பவர்களின் நிலையை புரிந்துகொண்டு இ-லேர்னிங் முறையையும் கெஸ்டோ அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் கெஸ்டோ அகாடமி இந்த துறையின் கல்வியை ஒரு உயர்மட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கி எப்படி நடத்துவது என்பது பற்றிய தொழில் பயிற்சியும் நடத்தப்படுகிறது.பேக்கரி கலை எனும் படிப்பும் இருக்கிறது. வாரஇறுதி நாட்களில் இதனை படிக்கலாம். இதனை கற்றுக்கொண்டவர்கள் தங்களின் வீடுகளிலேயே பேக்கரியை தொடங்கலாம்.
கெஸ்டோ சமையல் மற்றும் விருந்தோம்பல் அகாடமி, எமர்ஸ் வொகேஷனல் ஸ்கில்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்கள் எமர்ஸ் லேர்னிங் சர்வீசஸ் எனும் கம்பெனியின் கீழ் உள்ளன.
அடிப்படையான கல்வி இருந்தும் வேலைவாய்ப்பு இல்லாதவர்களை நோக்கி எமர்ஸ் லேர்னிங் சர்வீசஸின் படிப்புகள் இருக்கின்றன. 15 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரையான படிப்புக் காலத்தை அவை கொண்டுள்ளன. படிப்புக்கட்டணங்கள் மிக அதிகமாக இல்லை. படிக்கும்போதே பகுதிநேரமாக பணியாற்றி தங்களின் படிப்புக் கட்டணத்தைச் சம்பாதித்துக் கொள்ளும்வகையிலும் அவை உள்ளன.
வருகிற 2020 -ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்குப் பயிற்சியளித்து அவர்களைத் திறமைசாலிகளாக உருவாக்க வேண்டும் என்பது எமர்ஸ் லேர்னிங் சர்வீஸசின் லட்சியம்.

ஜெராக்ஸா, போட்டோ காப்பியா?

ஜெராக்ஸா, போட்டோ காப்பியா? 

 

 

 

திருவாளர் ஆராய்ச்சி மணியின் வீட்டில் நடைபெறும் ஒரு காட்சி இது. உற்சாகம் பொங்க அவர் வீட்டுக்குள் நுழைகிறார் அவர் நண்பர். 

“என் மகளுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு. அதுக்காகக் கொஞ்சம் எவர்சில்வர் பாத்திரங்கள் வாங்கணும்’’ என்கிறார். 
ஆனால் ஆராய்ச்சி மணியிடமிருந்து இப்படி ஒரு பதில் வருகிறது. “நோ, நான் இதை ஒத்துக்க மாட்டேன்’’. 

தனக்குத் தோன்றிய திகைப்பு உணர்வை ஒதுக்கிவிட்டு நண்பர் தொடர்கிறார். 

“நாலஞ்சு கல்யாணப் பத்திரிகை மாடல்களை ஜெராக்ஸ் எடுத்து வந்திருக்கேன். ஏதாவது ஒன்னை செலக்ட் பண்ணிக் கொடு’’. 

ஆராய்ச்சி மணியின் முகத்தில் ஏனோ சிறு அதிர்ச்சி. தன் உதடுகள் மீது விரல்களை வைத்து ‘வாயை மூடு’ என்பதுபோல் சைகை காட்டுகிறார். நண்பரால் புரிந்துகொள்ள முடியவில்லை. 

“என்னடா? உதட்டிலே பனி வெடிப்பா? ஏதாவது வாசலின் தடவிக்க’’ என்கிறார்.
“ஏண்டா இப்படிப் பேசறே?’’ என்று ஆராய்ச்சி மணி கத்த, நண்பர் திகைத்துப்போய்ண அதிர்ந்து குழம்புகிறார். பின் உரத்த குரலில் “எதுக்காக இப்படி உளறிட்டே இருக்கே? இப்படியே பேசினா உன் வாயிலே செல்லோ டேப்பைத்தான் ஒட்டணும்’’ என்கிறார்.
ஆராய்ச்சி மணி வெடிக்கிறார்.

 “ஐயோ, நீ அடங்கவே மாட்டியா? ’’

பொருள்களாய் மாறிய கம்பெனிகள் 
 
குழப்பமாக இருக்கிறதா? ஆராய்ச்சி மணி கொஞ்சம் அதிகப்படியாகவே ரியாக்ட் செய்கிறார் என்பது உண்மை. ஆனால் நண்பர் பேசுகிற ஒவ்வொன்றிலும் ஒரு தவறு இருக்கிறது என்பதால் விளைந்த எதிர்வினைதான் அது.
ஒரு மூலத்தை நகல் எடுக்கும்போது அந்தப் பிரதியை photocopy என்றுதான் கூற வேண்டும். Xerox என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். அந்த நிறுவனத்தினர் நகல் எடுக்கும் கருவியைப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சென்றவர்கள். இதன் காரணமாக ஜெராக்ஸ் என்ற வார்த்தை மக்கள் மனதில் பதிந்து ‘ஜெராக்ஸ் எடுப்பது என்றாலே பிரதி எடுப்பது என்று ஆகிவிட்டது.
வாசலின் என்பது யூனிலீவர் நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு. என்றாலும் ‘பெட்ரோலியம் ஜெல்லி’ என்ற பொதுவான நிவாரணியை நினைக்கும்போது வாசலின் என்ற பெயர்தான் முன்னுக்கு வருகிறது.
செல்லோ டேப் என்பது அலுவலகங்களிலும், சில வீடுகளிலும் சர்வசாதாரணமாகப் புழங்கும் ஒரு வார்த்தை. காகித உறைகளை ஒட்டுவதற்கும், சுவரில் தாள்களை ஒட்டுவதற்கும் நாம் பயன்படுத்தும் கம் அடங்கிய டேப்பை செல்லோ டேப் என்றே குறிப்பிடுகிறோம். செல்லோ டேப் என்பது. பிரிட்டனில் உள்ள தயாரிப்பு நிறுவனம் இது ஒளி நுழையக்கூடிய வகையில் (transparent) உள்ள செல்லுலோஸ் டேப்பை தயாரிக்கிறது. பின்னர் இதேபோல் சந்தைக்கு வந்த பிற நிறுவன தயாரிப்புகளைக்கூட நாம் பழக்கத்தின் காரணமாக செல்லோ டேப் என்றே குறிப்பிடுகிறோம்.
மிரிண்டா, ஃபான்டா போன்றவற்றை ஆரஞ்சு குளிர் பானங்கள் என்றும், பெப்சி, கோக்கோ கோலா போன்றவற்றை கோக் வகை குளிர்பானங்கள் என்றும் குறிப்பிடுகிறோம். ஆனால் கோக் என்பது கோகோ கோலா நிறுவனத்தின் பதிவுபெற்ற அதன் பிராண்டின் பெயர்.
எவர்சில்வர் என்பது சேலத்தில் நிறுவப்பட்ட ஸ்டெயின்லஸ் ஸ்டீல் வகைப் பொருட்களின் பிராண்ட் பெயர் ஆகும். எனவே எவர்சில்வர் பாத்திரங்கள் என்று பல கடைகளிலும் இப்போது விற்கும் பாத்திரங்களைக் குறிப்பிடக் கூடாது. ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பாத்திரங்கள் என்றுதான் குறிப்பிட வேண்டும்.
அவ்வளவு ஏன், நகரும் படிக்கட்டுகளில் மேலே ஏறுகிறோமே, அதை எஸ்கலேட்டர் என்கிறோம் அல்லவா? எஸ்கலேட்டர் என்பது ஓடிஸ் லிஃப்ட் நிறுவனத்தின் ஒருவகை டிரேட் மார்க். 

Adverb ன் விளக்கம் 
 
Adverbs பற்றிக் கொஞ்சம் விளக்குங்களேன். புண்ணியமாகப் போகும்’’ என்று ஒரு வாசகர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். வரும் புண்ணியத்தை வேண்டாமென்று ஒதுக்க முடியுமா? இதோ எளிய விளக்கம்.
Venkat runs. இந்த வாக்கியத்தில் Venkat என்பது noun. Runs என்பது verb.
Venkat runs quickly என்கிற வாக்கியத்தில் verb குறித்து விளக்குகிறது quickly என்ற வார்த்தை. அதாவது எப்படி ஓடினான் என்பதற்கு பதிலளிக்கிறது. இப்படி verbகளை விவரிக்கும் வார்த்தைகள் adverbs.
Have you read all the pages? என்ற கேள்வியில் உள்ள all என்ற வார்த்தைகூட adverbதான் என்பது கொஞ்சம் யோசித்தால் விளங்கிவிடும்.
Try again. I am much relieved. You should work hard. இந்த வாக்கியங்களில் எவை adverbs என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
நண்பர்களே, adverbs குறித்த எளிய, அடிப்படையான விளக்கம்தான் இது. வேறு பல கோணங்கள் adverbsக்கு உள்ளன. அவற்றைப் பற்றிப் பிறகு பேசலாம். 

Continuous - Continual 
 
இரண்டும் ஒன்று போலவே தொனித்தாலும், இரண்டுக்கும் ஓரளவு ஒரே மாதிரி அர்த்தம் இருந்தாலும் வேறுபாடு உண்டு.
Continuous என்பது நமக்குத் தெரிந்ததுதான். அதாவது தொடர்ந்து நடக்கும் ஒன்று. இடைவெளியே இருக்காது (அல்லது கிட்டத்தட்ட இருக்காது).
ஆனால் Continual என்றால் தொடர்ந்து நடைபெறும் ஒன்று என்றாலும் டெக்னிகலாகப் பார்த்தால் இடைவெளி நிச்சயம் உள்ள ஒன்று. அதாவது Continual barking of dog என்றால் நாய் தொடர்ந்து குரைத்தாலும் நடுநடுவே கொஞ்சம் இடைவெளி (வள் .. வள்வள் .. வள்வள் என்பதுபோல்) இருக்கத்தான் செய்யும் இல்லையா? அதுதான்.தமிழக மீனவர்களின் நிலை குறித்து தினமும் முதல்வர் பிரதமருக்குக் கடிதம் அனுப்பினார் என்றால் அதை Continual representations என்று சொல்லலாம். 


தொடர்புக்கு: aruncharanya@gmail.com

 

 

 

கல்வியில் மிளிரும் சிங்கப்பூர்

கல்வியில் மிளிரும் சிங்கப்பூர் 

ராஜாராம்

                                                          ராஜாராம்

சிங்கப்பூர் நவநாகரிக நாடு. உலக வரைபடத்தில் சிறு புள்ளிதான். ஆனால் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளில் தமிழும் ஒன்று.
அருகில் இருக்கும் நாடு
நம் நாட்டுக்கு மிக அருகில் இருக்கும் சிங்கப்பூரில் ‘சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம்’ உள்ளது. ஒவ்வொரு மனிதனும் எட்ட ஆசைப்படும் உலகத் தரம் வாய்ந்த கல்வியை அது வழங்குகிறது.
உலகத் தரமான கல்வி எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஒருவர் தம் கலாசாரத்தோடு வாழ்வதும் முக்கியமே.
சிங்கப்பூரில் உலகத் தரமான வாழ்க்கைக்கும் வழியுண்டு.தமிழுக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் இடமுண்டு.
தேசியப் பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்ப்புப் பிரிவின் இயக்குநர் ராஜாராம் நம்மோடு பகிர்ந்துகொண்டவை:
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், அதன் 16 பிரிவுகள் மற்றும் வகுப்புகள் மூலம், மாணவர்களுக்கு அவரவர் விருப்பம், தகுதிக்கு ஏற்ப தனித்துவம் மிக்க, பரந்த கல்விப் பாதையை வகுத்து இன்றைய தேவைக்கேற்ப அவர்களைத் தயார் செய்கிறது.
இன்றைய போட்டித்தன்மை மிகுந்த, வேகமான உலகத்தில், ஒருவர் எப்போதுமே முன்னிலை வகிக்க முயல வேண்டும்.
இது உலகத்தின் முதல்நிலை பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் பாரம்பரியம்மிக்கது மட்டுமல்ல, ஆய்வுத்துறை, எண்ணற்றப் பாடப்பிரிவுகள் மற்றும் மாணவர்களைத் தயார் செய்யும் முறை, உலகமயமாகிவரும் சூழலுக்கு ஏற்றக் கல்வி என அனைத்திலும் ஒரு தலைசிறந்த இடத்தைப் பிடித்துள்ளது.
மிகச் சிறந்த மாணவர்களின் ஆற்றல், திறமை இந்தச் சமுதாயத்துக்கு அவர்களின் மூலம் பங்காற்றுவதற்காக யூனிவர்சிட்டி ஸ்காலர்ஸ் புரோகிராம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இந்தப் பல்கலைகழகத்துக்கு எட்டு வெளிநாடுகளில் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்குச் சென்று நல்ல பலன் கொடுக்கும் தொழில்முனைவோர் கல்வி கற்கும் வாய்ப்பினையும் பெறலாம்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தோடு பங்காளித்துவப் பல்கலைக் கழகங்களாக அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், சீனாவில் உள்ள ஜின்குவா அல்லது ஃபுடான் பல்கலைக்கழகம், ஸ்வீடன் நாட்டில் உள்ள ராயல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி போன்ற பல்கலைக்கழகங்களுக்குச் சென்று படிக்கும் வாய்ப்பினையும் மாணவர்கள்பெறுவர்.
தேசியப் பல்கலைக் கழகத்தில், 37,000 மாணவர்கள், சுமார் 100 நாடுகளில்இருந்து, மூன்று வளாகங்களில் இருப்பதால்,, மாணவர்கள் பரந்துவிரிந்த உலகக் கலாச்சாரத்தையும், அனுபவத்தையும் பெற ஒரு நல்ல வாய்ப்பினைப் பெறுகின்றனர்.
விண்ணப்பிக்கும் முறைகளும், தேவைகளும்:
தேசியப் பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்க்கைப் பிரிவு, இளநிலைப் பட்டப் படிப்புக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, ஏறத்தாழ 40,000 விண்ணப்பங்களைப் பெறும். அவற்றில், சுமார் 6,500 இடங்கள் நிரப்பப்படும்.
இளநிலைப் பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும், வெளிநாட்டு மாணவர்கள், விண்ணப்பிக்கும் வருடத்தில், அவர்களின், உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்திருக்கவேண்டும்.
மேலும் அவர்கள் விண்ணப்பிக்க நினைக்கும் பாடத்திற்கான நிர்ணயிக்கப்பட்ட தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
பொதுவாக விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் தகுதி பின்வருமாறு:
1. இந்தியாவின் 12 CBSE
2. இந்தியாவின் 12 ICS
3. International Baccalaureate
4. Cambridge International A Levels
இதுதொடர்பான விரிவான தகவல்களைக் கீழ்க்காணும் முகவரியில் ஒருவர் பெறலாம்.
மாணவர்சேர்க்கை, கல்வி தகுதியின் அடிப்படையில் நடைபெறும். விண்ணப்பிக்கப் போதுமான தேவைகள் இருந்தால், ஒருவருக்கு இடம் கிடைத்துவிடும் என்று அர்த்தம் கொள்ள முடியாது.இதற்கு காரணம், தகுதிவாய்ந்த பல மாணவர்கள் விண்ணப்பிப்பதால், போட்டி அதிகமாகவே இருக்கும்.
வெளிநாட்டு மாணவர் களுக்கான மாணவர் சேர்க்கை, அக்டோபர் மாத இடையில் தொடங்கும். வெவ்வேறு தகுதிக்கும் விண்ணப்பம் பெற்று முடிக்கும் தேதி மாறுபடும்.விண்ணப்பிக்க விரும்புவோர், அக்டோபர் மாதம் முதல், தொடர்ந்து, பல்கலைக் கழகத்தின் இணையப் பக்கத்தைப் பார்த்துவரவும்.
விருப்பப்படும் மாணவர்கள், நேரடியாகக் கீழே காணும் முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம்.
விவரங்களுக்கு, கீழே காணும் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
என்கிறார் ராஜாராம்.
ராஜாராம்

Friday, 3 October 2014

சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில யோசனைகள்

சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில யோசனைகள்

 

பள்ளி படிப்பின் போதே தங்களது இலக்கை நிர்ணயிக்கும் பக்குவம் இன்றைய மாணவர்களிடம் அதிகரித்து வருகிறது. அதே சமயம் எதிர்காலம் குறித்த எந்தவித எண்ணமும் இல்லாமல், என்னென்ன படிப்புகள் உள்ளன? எந்த படிப்பு தனக்க உகந்தது? எந்த கல்லூரியை தேர்வு செய்வது? போன்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் காண முடியாமல் தவிக்கும் மாணவர்களையும் காண முடிகிறது. அத்தகைய மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றவராக இருக்கலாம் அல்லது சுமாரான மதிப்பெண் பெற்றவராகவும் இருக்கலாம்.

பெரும்பாலும் பாடப்பிரிவை விட சிறந்த கல்லூரியை தேர்வு செய்யவே மாணவர்கள் மற்றும் பெற்றோர் பெரிதும் திணறுகின்றனர். மதிப்பெண் மற்றும் தேவையை பொறுத்து ஒரு கல்லூரியை தேர்வு செய்தாலும், சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

* அங்கீகாரம்:

பொதுவாக கல்வி நிறுவனம், படிப்பு ஆகிய இரண்டுக்கும் தனித்தனியே அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அது குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கவும் வேண்டும். கல்லூரிகள் ஒரு குறிப்பிட்ட படிப்புக்கு அங்கீகாரம் பெற்று அது சார்ந்த வேறு சில படிப்புகளையும் உரிய அங்கீகாரம் பெறாமல் வழங்க வாய்ப்புண்டு.

எனவே, ஒரு கல்லூரியில் குறிப்பிட்ட படிப்பை தேர்வு செய்யும் முன்பாக மத்திய, மாநில அரசு மற்றும் அமைப்புகளால் உரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என்று பார்த்தல் அவசியம். உதாரணமாக, தொழில்நுட்ப படிப்பு எனில் ஏ.ஐ.சி.இ., மருத்துவ படிப்பு எனில் இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவம் எனில் இந்திய பல் மருத்துவ கவுன்சில், கலை மற்றும் அறிவியல் படிப்பு எனில் உரிய பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

* ஆசிரியர்கள்:

சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும். அதற்கு ஆசிரியர்கள் போதுமான கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம். அதாவது, நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் கல்லூரி மற்றும் துறையில் பி.எச்.டி., அல்லது எம்.பில்., ஆராய்ச்சி படிப்பை எத்தனை ஆசிரியர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை அவசியம் பெற்றிருக்க வேண்டும்.

* உள்கட்டமைப்பு வசதிகள்:

தற்போதைய சூழ்நிலைக்கேற்ப கணினி ஆய்வக வசதி, இணையதள வசதி, நூலக வசதி, கான்பரன்ஸ் ஹால், செமினார் ஹால், விளையாட்டு மைதானங்கள், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே விடுதிகள் போன்ற வசதிகளும் ஒரு கல்லூரியின் தரத்தை மதிப்பிட உதவுகிறது.

* வேலைவாய்ப்பு:

இன்றைய நிலையில் பெரும்பாலான பெற்றோரும், மாணவர்களும் வளாகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் கல்லூரிகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். கல்லூரிகள் தங்களது பெருமைக்காக பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயரை விளம்பரப்படுத்தலாம். ஆனால், அந்த நிறுவனங்கள் எப்போதோ, பெயரளவில் அங்கு வளாக நேர்காணலை நடத்தி இருக்கலாம். எனவே, ஆண்டுதோறும் எத்தனை மாணவர்கள் எந்தெந்த நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர் என்பதை அறிந்து கொள்வது உகந்தது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடமே நேரடியாக கேட்கலாம். உரிய பதில் கிடைக்கவில்லையென்றால், கல்லூரிக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளவும். முந்தைய ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் வளாகத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பதை பார்க்கவும். குறிப்பாக படித்த துறைக்கேற்ற வேலை பெற்றிருக்கின்றனரா? என்பதனையும் பார்க்க வேண்டும்.

* பாடத்திட்டங்கள்:


ஒவ்வொரு கல்வியாண்டிலும், பாடத்திட்டங்களை தற்போதைய நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்கிறதா, வேலைவாய்ப்பு பெறுவதற்குரிய கூடுதல் திறன்களை கற்றுத் தருகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். தொழில் நிறுவனங்களுடனான உறவு, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகள், பிற திறன் வளர்ப்பு சார்ந்த பயிற்சி திட்டங்கள், கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் போன்ற அம்சங்களையும் அறிந்து கொள்வது சிறந்தது.

இந்த அம்சங்கள் தான், ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்குரிய அளவுகோல். இதற்கு கல்லூரியின் இணையதளம், முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், கல்லூரியை பற்றி அறிந்தவர்கள், கல்வி ஆலோசகர்கள், கல்லூரிக்கு சென்று விசாரிப்பது போன்ற வழிகளை பின்பற்றி சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து எதிர்காலத்தை பிரகாசமாக்கி கொள்ளலாம்.

 

கணக்கு பண்ணுங்க...

கணக்கு பண்ணுங்க...

 

 

கணித குறுக்கு வழிகளுக்கு மத்தியில் அவற்றின் இயல்பு ஜாலங்களும் நம்மை வியக்க வைக்கின்றன. கணக்குகளை செய்யும் போது நமக்கு தகுந்தாற் போல் எண்களை மாற்றி மாற்றி கையாளும் நாம், எண்களுக்கு தகுந்தாற் போல் நம் எண்ணங்களை மாற்றி அவற்றை கையாண்டால் பல எண் மாயாஜாலங்களை நமக்கு அளிக்கிறது. எண்களின் எண்ணங்களுக்கு ஏற்ப அவற்றை மாற்றி மதிப்பிடும் விளையாட்டால் வருகிறது எட்டுகளால் உருவாகும் இந்த எட்டு படி விந்தை.

(9 * 9) + 7 = 88
(98 * 9) + 6 = 888
(987 * 9) + 5 = 8888
(9876 * 9) + 4 = 88888
(98765 * 9) + 3 = 888888
(987654 * 9) + 2 = 8888888
(9876543 * 9) + 1 = 88888888
(98765432 * 9) + 0 = 888888888

ஒருபுறம் 9-லிருந்து இறங்கு வரிசை முறையில் ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு எண்ணாக 2 வரை சேர்த்து கொண்டு (8, 7, 6, 5. . . .) அவற்றை 9 ஆல் பெருக்க வேண்டும். மறுபுறம் 9-ஆல் பெருக்க வந்த விடையுடன் சேர்த்து, முதல் படிக்கு 7-ல் ஆரம்பித்து, இறங்கு வரிசையில் ஒவ்வொரு படிக்கும் ஒரு எண் அடிப்படையில் 0 வரை கூட்டிக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு படியிலும் 8 உடன் 8 சேர்ந்து, எட்டாவது படியில் எட்டின் விந்தை காண கிடைக்கிறது. புதிய வழிகளை யோசித்து அதன் மூலம் வரும் கணித விந்தையை கண்டுபிடிக்க நாமும் முயற்சி செய்யலாமே...

எம்.காம்., டேக்ஸ்சேஷன் படித்தால் வரிவிதிப்புதுறை நிபுணராகலாம்

எம்.காம்., டேக்ஸ்சேஷன் படித்தால் வரிவிதிப்புதுறை நிபுணராகலாம்

  

 எம்.காம்., டேக்ஸ்சேஷன் படிப்பை முடித்தவர்களுக்கு உலகம் முழுவதும் பணி வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. அவர்களுக்கான தேவைகள் எப்போதும் குறைவதில்லை.

* இப்படிப்பு எப்படி?


வரிவிதிப்புகள் தொடர்பான அனைத்து தலைப்புகள் மற்றும் பாடங்கள் மீது இப்படிப்பு கவனம் செலுத்துகிறது. மேலும், இப்படிப்பில் வருமான வரி, விற்பனை வரி, வாட், சேவை வரி, சொத்து வரி, வரி சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் போன்ற அனைத்துவித வரிகளை பற்றிய விபரங்களும் இதில் அடங்கும். இந்த 2 வருட படிப்பு வரிவிதிப்பு துறை பற்றிய நடைமுறை உண்மை அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குகிறது.

இப்படிப்பு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சமகால வரிவிதிப்பு அம்சங்களை பற்றி அலசுகிறது. மேலும், வணிகத்தின் அடிப்படைகளோடு பற்றியதோடு மட்டுமல்லாமல், அதன் மேம்பட்ட துறைகளான மேலாண்மை, அட்வான்ஸ் அக்கவுண்டிங், பிசினஸ் என்வைரன்மென்ட், காஸ்ட் அனலிசிஸ் அன்ட் கன்ட்ரோல், கார்பரேட் லீகல் பிரேம் ஒர்க், அட்வான்ஸ் ஸ்டேடிஸ்டிகல் அனலிசிஸ், மேனேஜெரியல் எகனாமிக்ஸ், என்டர்பிரினியர்ஷிப் ஸ்கில் டெவலப்மென்ட், டைரக்ட் அண்ட் இன்டைரக்ட் டேக்ஸ், சேல்ஸ் அண்ட் சர்வீஸ் டேக்ஸ் அகியவற்றின் அம்சங்களையும் இப்படிப்பு விவரிக்கிறது.

* மாணவர் சேர்க்கை நடைமுறை :


இளநிலையில் வணிகப்படிப்பு முடித்திருப்பது கட்டாயம். பொதுவாக இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், தங்களின் இளநிலையில் குறைந்தது 45 சதவீதம் முதல் 50 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. பொதுவாக, மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும், சில பல்கலைகள், நேர்முகத் தேர்வையும் நடத்துகின்றன.

* படிப்பின் நன்மைகள்:

மாணவர்கர்களுக்கான பலவித வாய்ப்புகளை இப்படிப்பு ஏற்படுத்தி தருகிறது. இத்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்புவோர், எம்.பில்., மற்றும் பி.எச்டி., படிப்புகளையும் மேற்கொள்ளலாம். இத்துறை மிகவும் பரந்து விரிந்த ஒன்று என்பதால் ஒருவர் தனக்கு பிடித்தமான ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

* வேலை, சம்பளம், வளர்ச்சி:

இப்படிப்பை முடித்த பிறகு கஸ்டம்ஸ், ஸ்டேட் சேல்ஸ் டேக்ஸ் லா, இம்போர்ட் மற்றும் எக்ஸ்போர்ட் ஃபேர்ம்ஸ், எக்சைஸ் டிபார்ட்மென்ட் ஆகியவற்றில் பணியாற்றலாம். கேபிஎம்ஜி, எர்ன்ட்ஸ் அண்ட் யங், பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ், டிலோய்ட் போன்ற சட்ட மையங்கள் ஏறக்குறைய 60 சதவீதம் வரிவிதிப்பு நிபுணர்களை பணிக்கு அமர்த்துகின்றன.

ஒரு பெரிய கன்சல்டிங் நிறுவனத்தில் டேக்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் திட்டமிடுதலில் பட்டம் பெற்ற ஒருவருக்கு ஆரம்பநிலையிலேயே ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அதே சமயம் புதிதாக படித்து வெளிவருபவர்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை கிடைக்கிறது.

பொறுப்புக்கு தகுந்தபடிதான் சம்பளம் இருக்கும் என்றாலும் சில நாடுகளில் சில நிறுவனங்கள் ஆரம்ப நிலையிலேயே ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை தருகின்றன. இத்துறை சார்ந்த ஒரு நடுநிலையிலான நிபுணருக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கிடைக்கிறது.

நடுநிலையிலான நிபுணர் குறைந்த பட்சம் 4 ஆண்டுகள் வரையான அனுபவமும், ஒரு சீனியர் நிபுணர் குறைந்த பட்சம் 12 ஆண்டுகள் வரையிலான அனுபவமும் பெற்றிருப்பார். சில பெரிய நிறுவனங்கள் சர்வதேச டெபுடேஷன் வாய்ப்புகள் மற்றும் பல்வேறான துறைகளை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் ஆகியவற்றை அளிக்கின்றன.

* வரி வகைப்பாடுகள்:

வரி நிபுணர்களுக்கு இரண்டு விதமான தேவைப்பாடுகள் உள்ளன. உள்ளூர் தேவைகள் மற்றும் சர்வதேச தேவைகள் என்பவையே அவை. ஒரு நல்ல வரி நிபுணருக்கான பற்றாக்குறை மற்றும் உலகெங்கிலும் தற்போது அதிகரித்து வரும் வரி நடைமுறை சிக்கல்கள் போன்றவை இத்துறை நிபுணர்களின் சம்பளத்தை பெருமளவு அதிகரிக்க காரணமாய் அமைந்துள்ளன.

சமீப காலங்களில் இவர்களுக்கான சம்பளம் மிகவும் அதிகரித்து வருகிறது. நேரடி வரி நிபுணர்களை காட்டிலும், மறைமுக வரி நிபுணர்களுக்கு தேவை அதிகளவில் உள்ளது. ஆனால், நிபுணர்கள் குறைவான அளவிலேயே உள்ளனர். கஸ்டம்ஸ் அண்ட் எக்சைஸ் போன்ற துறைகளில் இந்த மறைமுக வரி நிபுணர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

* நிபுணர்களுக்கான தேவை:

கடந்த 4 ஆண்டுகளாக சர்வதேச சட்டங்களில் பரிச்சயம் பெற்ற வரி நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. தேவைக்கும், நிபுணர்களுக்கும் இடையிலான வித்தியாசம் அதிகரித்து கொண்டே வருவதால் இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயத்தில் வெறும் பட்டம் வாங்கினால் மட்டும் போதாது. இத்துறையில் சிறந்து விளங்க தேவையான அனைத்து திறன்களையும் சிறப்பான முறையில் வளர்த்து கொள்வது முக்கியம்.

* தொடர்புடைய படிப்புகள்:

மாஸ்டர் ஆப் காமர்ஸ் - அட்வான்ஸ் டேக்ஸ்சேஷன் அண்டு அக்கவுண்டிங், காஸ்ட் அக்கவுண்டிங் அண்டு டேக்ஸ்சேஷன், அக்கவுண்ட்ஸ் அண்டு டேக்ஸ்சேஷன்.

* தொடர்பான பாடங்கள்:

அட்வான்ஸ் அக்கவுண்டிங், காஸ்ட் அனலைசிஸ் அண்டு கன்ட்ரோல், கார்பரேட் லீகல் ஃபிரேம் ஒர்க், அட்வான்ஸ் ஸ்டேடிஸ்டிகல் அனலைசிஸ், மேனேஜிரியல் எகனாமிக்ஸ், அக்கவுன்டிங் பார் மேனேஜிரியல் டிசிசன்ஸ், டைரக்ட் டேக்ஸ், இன்டைரக்ட் டேக்ஸ், சேல்ஸ் அண்டு சர்வீஸ் டேக்ஸ்.

* இப்படிப்பை வழங்கும் முக்கிய கல்வி நிறுவனங்கள்:


ஏஐஎஸ்இசிடி யுனிவர்சிட்டி - போபால், சிவாஜி யுனிவர்சிட்டி - குவாலியர், ஐஐஎஸ் யுனிவர்சிட்டி - ஜெய்ப்பூர், எம்எஸ் யுனிவர்சிட்டி - பரோடா.

நடனமாடி திருக்குறள் கற்பிக்கும் ஆசிரியர்

நடனமாடி திருக்குறள் கற்பிக்கும் ஆசிரியர்

  • சுந்தர மகாலிங்கம்
    சுந்தர மகாலிங்கம்
பழந்தமிழ் இலக்கியத்தின் செய்யுள்களைச் சின்னஞ்சிறு குழந்தைகள் ஒப்பிக்கும்போது அதுவே பாடல் போலவும் அவர்களின் அசைவுகளே நடனம் போலவும் பெற்றோருக்கும் மற்றோருக்கும் இனிக்கும். ஆனால் ஓய்வுபெற்ற தலைமையாசிரிய ஒருவர் இசையோடும் நடனத்தோடும் திருக்குறளைச் சொல்லித்தருகிறார் என்றால் அது மேலும் இனிப்பான செய்தி அல்லவா? 

நடனக் குறள்
 
ஆசிரியர் சுந்தர மகாலிங்கம் மதுரை மாவட்டம், பரவையைச் சார்ந்தவர். கரூர் மாவட்டம் மஞ்சபுளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அவர்தான் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று மாணவ மாணவியருக்குத் திருக்குறளை நடனமாடிப் போதிக்கிறார்.
மாணவர்கள் மத்தியில் அவர் “திருக்குறளில் விளையாட்டு விளையாட போகிறோம்” என்று ஆரம்பிக்கிறார். மாணவர்கள் உற்சாகமடைகின்றனர்.
முத்தமிழ் என்றால் என்ன என்ன? என்று கேள்வி கேட்டு அவர்களின் பதில்களில் இருந்தே பாடம் புகட்டுகிறார்.எண் வரக்கூடிய திருக்குறளைச் சொல்லச் சொல்லி அந்தக் குறளை அபிநயம் பிடித்து நடித்துக் காட்டுகிறார்.
எட்டு, ஒன்பது தவிர மற்ற எண்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறள் சொல்லி அதற்கு நாட்டியம் ஆடிக்காட்டுகிறார்.மேலும் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி போன்றவற்றைப் பற்றியும் விளையாட்டாகக் கேள்விகள் கேட்டு அதற்குரிய குறளை மாணவர்களைச் சொல்லவைத்து அவற்றுக்கும் ஆடிக்காட்டுகிறார் . 

புதிர் விளையாட்டு
 
அகர,எண்ணென்ப, ஒருமையுள்,கற்க,சொல்லுக, நன்றி, துப்பார்க்கு, நன்றிக்கு வித்தாகும், ஒருமையும், உடுக்கை என ஆரம்பிக்கும் பல குறள்களுக்கு நடனம் ஆடிக் காட்டி மாணவர்களை நடன அசைவுகளின் மூலமாகவே குறள்களைப் புரிந்துகொள்ளத் தூண்டினார். எப்பொருள் என்று ஆரம்பிக்கும் குறளுக்குக் கதைகூறி நடனம் ஆடிப் பல அபிநயங்களைச் செய்து இசையோடு பாடமுடியும் என்பதைச் செய்து காட்டுகிறார்.
இசை, நடனத்தோடு கற்பித்தால், திருக்குறளையும் எளிதாக மனப்பாடம் செய்யாமல் மனதில் பதிய வைக்கலாம் என்பதை மாணவிகளை அகர முதல என்ற குறளை நடனம் ஆடி இசையோடு கற்றுக் கொடுத்து அவர்களையும் ஆட வைக்கிறார்.
ஒரே மாதிரியாக வரக்கூடிய இரண்டு குறள்களையும், மூன்று பாலிலும் இடம் பெறக்கூடிய ஒவ்வொரு குறளையும் நடனத்துடன் ஆடி, பாடிக் காட்டுகிறார்.
திருக்குறளை நடனமாடிச் சொல்லிக் கொடுத்ததைக் கற்றுக் கொண்ட மாணவிகளில் சிலர் மேடையில் நடனத்துடன் ஆடிக் காண்பிக்கவும் செய்கின்றனர்.
திருக்குறளை எளிதாகப் எவ்வாறு படிக்கலாம் என்பதற்கும் அவர்சுருக்கமான வழி சொல்லித்தருகிறார். முதல் அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களிலும் இருக்கிற முதல் எழுத்துகளைத் தொகுத்து 'அ க ம வே இ பொ த அ கோ பி' என்ற சூத்திரத்தை அவர் உருவாக்கி உள்ளார். அதன் மூலமாக நினைவில் வைத்துக் கொண்டால் ஏறு வரிசையிலும், இறங்கு வரிசையிலும் நினைவில் வைத்துக் குறள்களைச் சொல்லலாம் எனக் கூறுகிறார். 

குறள் சுற்றுப்பயணம்
 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அண்மையில் மாணவர்களுக்கு நடனம் மூலம் திருக்குறள் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்த அவரைத் தொடர்பு கொண்டபோது
“நான் திருக்குறள் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதனால் இசை, நடனம் மற்றும் பாவனைகளுடன் அவற்றைப் பால்வாடி மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை தேடிச் சென்று இலவசச் சேவையாக இதனைச் செய்து வருகின்றேன். (எனது கைபேசி எண் :9626365252) அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி,
கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் என அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் எந்தப் பாகுபாடும் காட்டாமல் சென்று இசையோடு கற்பித்தால், திருக்குறளை எளிதாக அனைவர் மனதிலும் பதிய வைக்கலாம் என்ற நோக்கத்தோடு இதனைச் செய்து வருகின்றேன்.” என்கிறார் சுந்தர மகாலிங்கம்.

 

கோ ஹோம், கோ டூ ஹோம் எது சரி ?

கோ ஹோம், கோ டூ ஹோம் எது சரி ?

 

OMNI
 
ஆம்னி என்றால் எல்லாம் என்று அர்த்தம். இறைவனை OMNIPRESENT என்பதுண்டு. அதாவது எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவன். OMNIPOTENT என்றும் சொல்வதுண்டு. சர்வசக்திகளும் படைத்தவன் என்ற அர்த்தத்தில். OMNIVORE என்றால் எல்லாவற்றையும் சாப்பிடக்கூடிய மிருகம் என்று பொருள். அதாவது பிற விலங்குகள், தாவரங்கள் என்று எதையும் சாப்பிடக் கூடியது.
அதெல்லாம் இருக்கட்டும் OMNI BUS என்கிறோமே அதற்கு என்ன அர்த்தம்? அந்தக் காலத்தில் குதிரைகளால் இழுக்கப்பட்ட, மூடப்பட்ட வண்டியைத்தான் OMNIBUS என்பார்கள். லத்தீன் மொழியில் OMNIBUS என்றால் அனைவருக்குமானது என்று பொருள். OMNIBUS எந்த இடத்திற்கும் செல்லும் (அதாவது இந்த தடத்தில் மட்டுமே இது செல்லும் என்பது கிடையாது). 

Potable water
ஓர் அடுக்கக விற்பனை விளம்பரத்தில் வசதிகள் என்ற பட்டியலின் கீழ் Potable water என்று குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டும் ஒரு வாசகர் இப்படியொரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். ‘’வெளியிடத்திலிருந்து இங்கே தண்ணீர் கொண்டு வருகிறார்கள் என்றால் அது எப்படி ஒரு சாதகமான விஷயம்?’’.
Potable என்ற வார்த்தையோடு portable என்ற வார்த்தையை இவர் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்று படுகிறது. Portable என்றால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய என்று பொருள். Potable என்றால் குடிக்கத்தக்க என்று அர்த்தம்.
Potable water என்றால் அந்த நிலத்தில் கிடைக்கும் தண்ணீர் குடிக்கத்தக்கது - அதாவது உப்பாக இருக்காது என்று பொருள். இது சாதக மானதுதானே? 

டெலிவரி
 
‘’My wife delivered a baby yesterday’’ என்று ஒருவர் சொன்னால் என்ன செய்வீர்கள்? ‘’இதென்ன கேள்வி? கை கொடுப்பேன். வாழ்த்து சொல்வேன்.. மறக்காமல் “எப்ப ட்ரீட் என்பேன்’’ என்கிறீர்களா? இதையெல்லாம் செய்யுங்கள். ஆனால் பிறகு நேரம் கிடைக்கும்போது அவர் கூறிய வாக்கியத்திலுள்ள தவறையும் எடுத்துக் காட்டுங்கள்.
‘’My wife delivered a baby yesterday’’ என்ற வாக்கியத்தில் என்ன தவறு என்கிறீர்களா? இப்படி யோசியுங்கள். உங்களுக்கு ஒரு தபாலில் ஒரு பார்சல் வந்தால் அதை ‘’The postman delivered a parcel’’ என்பீர்கள் இல்லையா? அதாவது தபால்காரரின் வேலை யாரோ அனுப்பிய பார்சலை உங்களிடம் சேர்ப்பிப்பது மட்டும்தான். ஆனால் உங்கள் நண்பரின் மனைவி கஷ்டப்பட்டுத் தானாகவே ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறாள். அவருக்குப் பிரசவம் பார்த்த டாக்டரைப் பற்றி வேண்டுமானால் ‘’The doctor delivered the baby to me’’ எனலாம். எனவே ‘’My wife gave birth to a child yesterday’’ என்று உங்கள் நண்பர் கூறுவதுதான் சரியானது. 

புயலென…
 
Stormed என்பதன் அர்த்தத்தைக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். Storm என்பது புயல். இது பெயர் சொல். ஆனால் Stormed என்பது கடந்த கால வினைச்சொல் - Verb in past tense.
Stormed என்றால் கோபத்துடனும், வேகமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வது என்று பொருள். எடுத்துக் காட்டு - He burst into tears and stormed off. புயலெனக் கிளம்பினான், வில்லினின்று விடுபட்ட அம்பு
போலக் கிளம்பினான் என்றெல்லாம் இதற்குப் பொருள் கொள்ளலாமா என்று கேட்கும் அனைத்து ராசி நண்பர்களே, கொள்ளலாம். கொள்ளலாம் என நான் கூறுகிறேன். 

பொங்கி எழும் வாசகர்கள்
 
நம் வாசக நண்பர்கள் “பொறுப்பதே வேண்டாம். பொங்கி எழு” பிரிவினர்.
“பாரம்பரியம் மிக்க இந்து இதழில் நீங்கள் இப்படி ஒரு தவறு செய்யலாமா?” என்று ஒருவர் கடிதம் போட்டுள்ளார்.
இருவாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டிருந்த கார்ட்டூனில் “Go to home” என்ற வாக்கியம் இடம் பெற்றிருந்தது. “Go home” என்பதுதான் சரி என்று சுட்டியும், குட்டியும் வந்தன கடிதங்கள்.
“Go to home” என்று நான் எழுதுவதற்கு முன்பாக எனக்குள் நானே இரண்டு பகுதிகளாகப் பிரிந்து (அந்தக் காலத் திரைப்படக் காட்சிகளில் காணப்படுவது போல) விவாதித்தேன். அந்த விவாதம் இப்படி இருந்தது.
பகுதி 1 – Go abroad என்றுதானே எழுதுகிறோம்? அப்படியானால் Go home என்றுதான் எழுத வேண்டும்.
பகுதி 2 – Go to hospital என்று எழுதுவாயா? இல்லை Go hospital என்று எழுதுவாயா? (இந்த இடத்தில் பகுதி-2 விடமிருந்து ஏளனச் சிரிப்பு. காரணம் Go hospital என்றதும் மருத்துவமனையே நகர்ந்து செல்வது போன்ற காட்சி அதற்குள் விரிகிறது).
பகுதி 1 – இதென்ன உளறல்? Go to downstairs என்பாயா? Go downstairs தானே? எனவே Go home தான்.
பகுதி 2 – அதெல்லாம் இருக்கட்டும். Go to house என்று எழுதும்போது Go home என்று ஏன் எழுத வேண்டும்?
பகுதி 1 – பிரபல இலக்கண நூல்களை ரெஃபர் செய்தும் புரிய வில்லையா? Go home என்பதில் home என்பது adverb ஆகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
(இதைத் தொடர்ந்து ‘’Home என்பது இந்த இடத்தில் adverb என்றால் house என்பது ஏன் adverb இல்லை? தவிர இந்த விளக்கம் தெளிவைத் தரவில்லை’’ என்றெல்லாம் விவாதித்த பகுதி – 2, ‘’Go to Home’’ என்றே எழுத வைத்து விட்டது.)
வாசகர்களின் கடிதங்களுக்குப் பின் -
பகுதிகள் 1 & 2 இரண்டும் சேர்ந்து சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது இதுதான். லாஜிக் எப்படி இருந்தாலும், சமீபத்தில் சில ஆங்கில எழுத்தாளர்கள் வேறுமாதிரி எழுதினாலும், தொன்று தொட்டுப் பயன்பாட்டில் இருப்பது Go Home தான். Go Home தான்.
என்ன … திருப்தி தானே- ?
(தொடர்புக்கு : aruncharanya@gmail.com)

 

 

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்

 
 
உடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் ஊனத்துடன் உள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது.
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும். கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய www.nhfdc.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.

 

நல்லாப் படிக்கச் சில வழிமுறைகள்!

நல்லாப் படிக்கச் சில வழிமுறைகள்!

 
 
 
ஒரு பாடத்தை எந்த முறையில் படிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதால் பாடத்தை எளிதாகப் புரிந்து படிக்க முடியும். 

இதோ உங்களுக்காக சில பயனுள்ள டிப்ஸ்:
படிக்கப் போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும் துணைத் தலைப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் இப்பாடம் எதைப் பற்றியது என்பது விளங்கும். பாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும். இதிலுள்ள சில வார்த்தைகளைப் படிக்கும்போது மனத்தில் கேள்விகள் எழும். 

கேள்வி கேட்டு..
பாடச் சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.எதற்காக இதைப் படிக்கிறோம்? அதன் பயன் என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். உதாரணமாக, அறிவியலில் மின்னாற் பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற் பகுப்பு என்றால் என்ன? என்ற கேள்வியை மனத்தில் எழுப்ப வேண்டும். 

வாசித்தல்
அர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும். படித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புபடுத்தி உதாரணத்தோடு படிக்க வேண்டும். புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடு போடுவதைத் தவிர்க்க வேண்டும். மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிடலாம். இதனால் திருப்பிப் பார்க்கும்போது குழப்பமில்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவிற்குக் கொண்டு வர முடியும். 

சொல்லிப் பார்த்தல்
வாசித்து முடித்தபிறகு, முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்க வேண்டும். இம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும். படித்தவற்றைச் சொந்த வார்த்தைகளில் சத்தமாகச் சொல்லிப் பார்க்க வேண்டும். மேற்கொண்ட முறைகளைப் பின்பற்றி ஒரு பிரிவை முடித்தவுடன் அடுத்த பிரிவிற்குச் செல்ல வேண்டும். 

மாதிரித் தேர்வு
பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு முறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடைசியாகப் பாடச் சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும். 

நினைவாற்றலுக்கு...
ஒரு விஷயத்தைச் சாதாரணமாக ஞாபகம் வைத்துக் கொள்வதைவிட, சில குறிப்புகளால் மனதில் வைத்துக் கொண்டால் அவை எளிதில் மறக்காது. உதாரணமாக வண்ணம், ஓசை மற்றும் எழுத்துகள் போன்றவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். எளிய உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும் ஞாபகச் சக்தி அதிகரிக்கும். தினமும் நடைப்பயிற்சி, நீச்சல் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்டால் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும். உணவுப் பொருட்களில் பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வதால் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.
அதிக எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட பொருட்களைத் தவிர்ப்பது நலம். இவை மட்டுமல்லாமல் நல்ல சுற்றுச்சூழலும், அமைதியான குடும்பப் பின்னணியும், நல்ல நண்பர்களையும் கொண்டிருப்பதும் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும்