நடனமாடி திருக்குறள் கற்பிக்கும் ஆசிரியர்
- சுந்தர மகாலிங்கம்
பழந்தமிழ் இலக்கியத்தின் செய்யுள்களைச் சின்னஞ்சிறு குழந்தைகள்
ஒப்பிக்கும்போது அதுவே பாடல் போலவும் அவர்களின் அசைவுகளே நடனம் போலவும்
பெற்றோருக்கும் மற்றோருக்கும் இனிக்கும். ஆனால் ஓய்வுபெற்ற தலைமையாசிரிய
ஒருவர் இசையோடும் நடனத்தோடும் திருக்குறளைச் சொல்லித்தருகிறார் என்றால் அது
மேலும் இனிப்பான செய்தி அல்லவா?
நடனக் குறள்
ஆசிரியர் சுந்தர மகாலிங்கம் மதுரை மாவட்டம், பரவையைச் சார்ந்தவர். கரூர்
மாவட்டம் மஞ்சபுளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை
ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அவர்தான் கல்வி
நிறுவனங்களுக்குச் சென்று மாணவ மாணவியருக்குத் திருக்குறளை நடனமாடிப்
போதிக்கிறார்.
மாணவர்கள் மத்தியில் அவர் “திருக்குறளில் விளையாட்டு விளையாட போகிறோம்” என்று ஆரம்பிக்கிறார். மாணவர்கள் உற்சாகமடைகின்றனர்.
முத்தமிழ் என்றால் என்ன என்ன? என்று கேள்வி கேட்டு அவர்களின் பதில்களில்
இருந்தே பாடம் புகட்டுகிறார்.எண் வரக்கூடிய திருக்குறளைச் சொல்லச் சொல்லி
அந்தக் குறளை அபிநயம் பிடித்து நடித்துக் காட்டுகிறார்.
எட்டு, ஒன்பது தவிர மற்ற எண்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறள் சொல்லி அதற்கு
நாட்டியம் ஆடிக்காட்டுகிறார்.மேலும் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
போன்றவற்றைப் பற்றியும் விளையாட்டாகக் கேள்விகள் கேட்டு அதற்குரிய குறளை
மாணவர்களைச் சொல்லவைத்து அவற்றுக்கும் ஆடிக்காட்டுகிறார் .
புதிர் விளையாட்டு
அகர,எண்ணென்ப, ஒருமையுள்,கற்க,சொல்லுக, நன்றி, துப்பார்க்கு, நன்றிக்கு
வித்தாகும், ஒருமையும், உடுக்கை என ஆரம்பிக்கும் பல குறள்களுக்கு நடனம்
ஆடிக் காட்டி மாணவர்களை நடன அசைவுகளின் மூலமாகவே குறள்களைப்
புரிந்துகொள்ளத் தூண்டினார். எப்பொருள் என்று ஆரம்பிக்கும் குறளுக்குக்
கதைகூறி நடனம் ஆடிப் பல அபிநயங்களைச் செய்து இசையோடு பாடமுடியும் என்பதைச்
செய்து காட்டுகிறார்.
இசை, நடனத்தோடு கற்பித்தால், திருக்குறளையும் எளிதாக மனப்பாடம் செய்யாமல்
மனதில் பதிய வைக்கலாம் என்பதை மாணவிகளை அகர முதல என்ற குறளை நடனம் ஆடி
இசையோடு கற்றுக் கொடுத்து அவர்களையும் ஆட வைக்கிறார்.
ஒரே மாதிரியாக வரக்கூடிய இரண்டு குறள்களையும், மூன்று பாலிலும் இடம்
பெறக்கூடிய ஒவ்வொரு குறளையும் நடனத்துடன் ஆடி, பாடிக் காட்டுகிறார்.
திருக்குறளை நடனமாடிச் சொல்லிக் கொடுத்ததைக் கற்றுக் கொண்ட மாணவிகளில் சிலர் மேடையில் நடனத்துடன் ஆடிக் காண்பிக்கவும் செய்கின்றனர்.
திருக்குறளை எளிதாகப் எவ்வாறு படிக்கலாம் என்பதற்கும் அவர்சுருக்கமான வழி
சொல்லித்தருகிறார். முதல் அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களிலும் இருக்கிற
முதல் எழுத்துகளைத் தொகுத்து 'அ க ம வே இ பொ த அ கோ பி' என்ற சூத்திரத்தை
அவர் உருவாக்கி உள்ளார். அதன் மூலமாக நினைவில் வைத்துக் கொண்டால் ஏறு
வரிசையிலும், இறங்கு வரிசையிலும் நினைவில் வைத்துக் குறள்களைச் சொல்லலாம்
எனக் கூறுகிறார்.
குறள் சுற்றுப்பயணம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
அண்மையில் மாணவர்களுக்கு நடனம் மூலம் திருக்குறள் சொல்லிக்கொடுத்துக்
கொண்டிருந்த அவரைத் தொடர்பு கொண்டபோது
“நான் திருக்குறள் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதனால் இசை, நடனம் மற்றும்
பாவனைகளுடன் அவற்றைப் பால்வாடி மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை
தேடிச் சென்று இலவசச் சேவையாக இதனைச் செய்து வருகின்றேன். (எனது கைபேசி எண்
:9626365252) அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி,
கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் என அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும்
எந்தப் பாகுபாடும் காட்டாமல் சென்று இசையோடு கற்பித்தால், திருக்குறளை
எளிதாக அனைவர் மனதிலும் பதிய வைக்கலாம் என்ற நோக்கத்தோடு இதனைச் செய்து
வருகின்றேன்.” என்கிறார் சுந்தர மகாலிங்கம்.
No comments:
Post a Comment