Monday, 24 November 2014

ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்க்க ஒரு சங்கம்!

ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்க்க ஒரு சங்கம்!

 
 
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில், ஆங்கிலப் பேச்சுத்திறனை வளர்த்துக் கொள்ளவும் சங்கம் ஆரம்பித்திருக்கிறார்கள். 

மதுரை அண்ணாநகரில் வாரந்தோறும் சனிக்கிழமை சங்கம் கூடுகிறது. புதியவர் ஒருவர் மற்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஏதாவது தலைப்பில் பேசுவார். பதற்றமின்றி, ரொம்ப ஜாலியாக அவரைப் பேச வைக்கிறார்கள் மற்றவர்கள். டி.வி. ஷோக்களில் குழந்தைகளையும், இளைஞர்களையும், “என்னடா பண்ற நீ?” என்று திட்டுவார்களே, அப்படியெல்லாம் செய்யாமல் தட்டிக் கொடுத்து தவறு இருந்தால் ரொம்ப பக்குவமாகத் திருத்துகிறார்கள். இந்த நட்புச் சூழல் காரணமாக விளையாட்டாகப் பேச ஆரம்பித்தவர்கள் கூட, நாளடைவில் விவரமான பேச்சாளராகிவிடுகிறார்கள். 

உலகளாவிய சங்கம்
 
இது போதாதா? ஐந்தே ஐந்து இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கத்தில் இப்போது 22 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதைப் பற்றி மதுரையில் அதைத் தொடங்கியவர்களில் ஒருவரான சச்சினிடம் பேசினோம்.
“நான் பி.பார்ம் கடைசி வருஷம் படிச்சிக்கிட்டு இருந்தப்ப, பயிற்சி மையம் ஒன்றில் பெங்களூரில் ஐ.டி. துறையில் பணிபுரியும் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். பெங்களூரில் டோஸ்ட்மாஸ்டர் (toastmasters) கிளப்பில் உறுப்பினராக இருப்பதாகவும், அதன் மூலம் தன்னுடைய ஆங்கிலப் பேச்சுத் திறனையும், தலைமைப் பண்பையும் வளர்த்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். 

அதைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்காக நண்பர்களுடன் இணையத்தில் மேய்ந்தபோது, அது ரோட்டரி கிளப்பை போன்ற உலகளாவிய அமைப்பு என்றும், 130 நாடுகளில் சுமார் 14,700 கிளப்கள் இருப்பதாகவும் தெரிந்து கொண்டேன். தென்தமிழகத்தில் தூத்துக்குடியில் மட்டும் இதுபோன்ற கிளப் இருப்பதை அறிந்து, நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தோம். மதுரையிலும் அதைப்போல ஒரு கிளப்பை ஆரம்பித்தால், ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்றவற்றுக்கு அலையத் தேவையிருக்காதே என்று தோன்றியது. இப்படித்தான் மதுரை கிளப் பிறந்தது. 

பரவும் சங்கம்
 
பொதுவாகப் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கும்போது இருக்கிற ஆர்வம், நாளடைவில் குறைந்து போய்விடும். ஆனால், இந்த கிளப் நடவடிக்கைகள் எங்களுக்குள் ஏற்படுத்தியுள்ள மாற்றம் காரணமாக ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எப்படி உடை அணிவது, எவ்வாறு பேசுவது, கூட்டத்தை எவ்வாறு நடத்துவது என்று எல்லாவற்றுக்கும் விதிகள் இருக்கின்றன. அதனை முழுமையாகக் கடைபிடிக்கிறோம். 

முதன் முதலாக ஒருவர் பேசப் போகிறார் என்றால், கிளப் உறுப்பினர்கள் எல்லாம் எழுந்து நின்று அவருக்கு ஊக்கம் கொடுப்போம். தொடர்ந்து 10 கூட்டங்களில் பேசிவிட்டால், நல்ல ஆங்கிலப் பேச்சாளர் என்று சான்றிதழே கொடுத்துவிடுவார்கள். எங்கள் கிளப்பின் வெற்றியைத் தொடர்ந்து இப்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், விருதுநகர் போன்ற இடங்களிலும் இந்த கிளப் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்றார்.

 

நீங்கள் நாத்திகரா, ஆத்திகரா, நிகிலிஸ்டா?

நீங்கள் நாத்திகரா, ஆத்திகரா, நிகிலிஸ்டா?

 

 

 

“ஆங்கில இதழ் ஒன்றில் நடிகை ஒருவரைப் பற்றிய கட்டுரையைப் படித்தேன். Actress என்ற வார்த்தைக்குப் பதிலாக Actor என்றே பல இடங்களில் அந்த நடிகையைக் குறிப்பிட்டிருந்தார்கள். இது தவறு இல்லையா?’’ வாசகர் ஒருவரின் கேள்வி இது. 

பழங்காலத்தில் இதைத் தவறு என்றுதான் சொல்வார்கள். ஆனால் தற்போது பாலினத்தைக் குறிப்பிடாத​ பொது வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறார்கள். அந்த விதத்தில் Actor என்ற வார்த்தை நடிகர், நடிகை ஆகிய எவரையும் குறிக்கலாம் (தமிழில் கூட ‘மாணவர்’ என்ற வார்த்தை மாணவன், மாணவி ஆகிய இருவரையும் குறிக்கும்). 

ஆண்மொழி
 
நிறுவனத்தின் உச்சபதவியை அடைந்த ஒரு பெண்ணை அப்போதும் chairman என்றுதான் குறிப்பிட்டார்கள். பிறகு chairwoman என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார்கள். பிறகு யாராக இருந்தாலும் chairperson என்று குறிப்பிடலாம் என்ற நிலை வந்தது. (ஆனால் இது அரைகுறையாகத்தான் பின்பற்றப்படுகிறது. அந்த உயர் பதவியை ஒரு பெண் வகிக்கும்போது மட்டும் chairperson என்கிறார்கள்!). 

நம் வழக்கில் பல வார்த்தைகளை ஆண்களோடு இணைத்துத்தான் குறிப்பிடுகிறோம். ஒரு புதிர் நினைவுக்கு வருகிறது. ஒரு டாக்டர் தன் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்தார். ஆனால் அந்த டாக்டர் அவனுடைய அப்பா அல்ல. இது எப்படிச் சாத்தியம்? 

இந்தக் கேள்வியைக் கேட்டால் பதிலளிப்பவர் விழிப்பார் அல்லது சில நொடிகளுக்குப் பிறகே புரிந்துகொள்வார். இதுதான் பெரும்பாலும் நடக்கும். காரணம் டாக்டர் என்றால் அது ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்று நம் மனதில் ஒரு படிமம். இத்தனைக்கும் எக்கச்சக்கமான பெண் மருத்துவர்களை நாம் சந்தித்து வருகிறோம். 

ஆண்மொழி அகற்றம்
 
ஆண்களை மட்டுமே மையப்படுத்தும் வார்த்தைகளை மாற்றித்தான் பயன்படுத்த வேண்டுமென்று நாகரிக உலகம் இப்போது எதிர்பார்க்கிறது. Policeman என்ற வார்த்தைக்குப் பதிலாக Police Officer என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள். 

Workman எதற்கு? Worker எனலாமே. 

முன்னோர் என்பது தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும் மட்டுமா? பாட்டிக்கும் கொள்ளுப் பாட்டிக்கும்கூட அதில் இடம் உண்டுதானே?. Forefather என்ற வார்த்தைக்குப் பதிலாக Ancestor என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.
Manpower? ஊஹூம். Staff? அதுதான் சரி. 

இது தொடர்பாகப் பேசியபோது “இதையெல்லாம் ஆணாதிக்கம் என்று சொல்லி மாற்ற வேண்டியது அனாவசியம். எளிமையாகவும், பழகிவந்ததாகவும் இருப்பதை எதற்காக மாற்ற வேண்டும்?” என்ற ஒரு நண்பர் ஒரு எடுத்துக் காட்டையும் வீசினார். “Each student must wear his coat” என்று இருபாலர் கல்லூரியின் அறிவிப்புப் பலகையில் போட்டால் மாணவிகளும் அதைப் புரிந்துகொண்டு கோட் அணிந்துதான் வருவார்கள். “Each student must wear his or her coat” என்னும் வாக்கியம் நெருடலாக இல்லையா?’’ என்றார்.
கொஞ்சம் நெருடல்தான். ஆனால் அதை வேறு பலவிதங்களில் சரி செய்ய முடியும். 

முதல் வழி, அந்த வாக்கியத்தைப் பன்மையாக்கிவிட முடியும். All students must wear their coats என்று குறிப்பிடலாமே. 

வாக்கியத்தில் உள்ள pronounஐ நீக்கி வாக்கியத்தைச் சற்றே மாற்றுவதன் ​மூலமும் இதைச் செய்யலாம். Every student must wear coat. 

Second person ஆக வாக்கியத்தை மாற்றுவதும் ஒரு தீர்வுதான். (First person என்றால் I, second person என்றால் you, third person என்றால் he, she, it என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்). Wear your coats without fail. 

SIMULATE – STIMULATE – STIPULATE
 
Simulate என்றால் ஒன்றை வேறொன்று போலவே பாவிப்பது. விண்வெளிப் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள் என்றால் அதற்கு முன்பாக விண்வெளியில் இருப்பது போன்ற ​சூழலில் விண்வெளிவீரர்களை விஞ்ஞானிகள் ‘பயணம்’ செய்ய வைப்பார்கள். இது simulation. 

Future Population changes were simulated by computer என்பது மற்றொரு உதாரணம். அதாவது ஒன்றை அதன் பிரதி போலக் கற்பனை செய்வது அல்லது கற்பனை ​சூழலை உருவாக்குவது எனலாம். 

Simulate என்றால் ஊக்கப்படுத்துதல் என்று பொருள். This drug stimulates heart. The reader felt stimulated while reading a book. 

Stipulate என்றால் ஒரு தேவையைக் குறிப்பாகத் தெரியப்படுத்துதல் - அதாவது உடன்படிக்கைகளில் இருப்பதுபோல. Specify, state clearly என்று இதற்கான அர்த்தத்தைக் கூறலாம். 

நீங்கள் nihilist-ஆ? 

உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா? கடவுள் இல்லை என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்களை atheist என்று அழைக்கலாம்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றால் theist. (theo என்றால் இறை நம்பிக்கை என்று பொருள்). 

“நான் கடவுளை மறுக்கவும் இல்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. என்னை எப்படி அழைப்பீர்கள்?’’ என்றால் agnostic என்ற வார்த்தை இதற்குத்தான் இருக்கிறது. 

இதையும் தாண்டிய ஒரு நிலை உள்ளது. விரக்தி பொங்க “கடவுள், ஒழுக்க நெறிகள் எல்லாமே வேஸ்ட். வாழ்க்கையே அர்த்தமில்லாதது” என்ற மனநிலையில் இருந்தால், உங்களை nihilist எனலாம்.

நம்மில் பலரும் வாழ்க்கையின் வெவ்வேறு சமயங்களில் இப்படி எல்லா நிலைகளிலும்தான் இருக்கிறோம் இல்லையா? 


 

மிகப் பெரிய்ய்ய்……………ய முதன்மை எண்

மிகப் பெரிய்ய்ய்……………ய முதன்மை எண்

 

 
 
ஒரு எண் 1ஆலும் அதே எண்ணாலும் மீதியில்லாமல் வகுபட்டால் அந்த எண் முதன்மை எண் அல்லது பகா எண் எனப்படுகிறது. அப்படிப்பட்ட சில முதன்மை எண்களாக 2, 3, 5, 7, 11, 13, 17 ,19 ஆகியவை உள்ளன. அது சரி! ஆகப்பெரிய முதன்மை எண் எது? அதைக் கண்டுபிடிப்பது கணித விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரிய விளையாட்டு. 

எண்களின் பிரபஞ்சம்
 
எண்களின் உலகமும் ஒரு எல்லையில்லாத பிரபஞ்சம்தான். மிகப் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பது என்பது எல்லையில்லாத பிரபஞ்சத்தின் எல்லையைக் காண முயலுகிற மணலைக் கயிறாகத் திரிக்கும் விஞ்ஞானத் துணிச்சல்தான். 

இப்படிப்பட்ட முதன்மை எண்களை கண்டுபிடிப்பதற்காக கிரேட் இன்டர்நெட் மெர்சேன் பிரைம் செர்ச் (Great Internet Mersenne Prime Search (GIMPS) என்ற கணினி வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 1996-ல், ஜோர்ஜ் வோல்ட்மன் என்பவர் இதை உருவாக்கினார். 

இந்தத் திட்டத்தின் மூலம் சமீபத்தில் புதிதாக ஒரு முதன்மை எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 100 என்ற எண்ணில் மூன்று இலக்கங்கள் இருப்பது போல, புதிதாக கண்டுபிக்கப்பட்ட இந்த மா…பெரும் முதன்மை எண்ணில் 1 கோடியே 74 லட்சத்து 25ஆயிரத்து 170 இலக்கங்கள் உள்ளன. 

ஆயிரம் கணினிகள்
 
இப்படிப்பட்ட முதன்மை எண்கள் மேர்சேன் முதன்மை எண்கள் என அழைக்கப்படுகின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எண்ணின் கணிதக் குறியீடு 2p 1 என்று இருக்கும். அமெரிக்காவின் மத்திய மிசூரிப் பல்கலைக்கழகப் பேராசிரியரான கேர்ட்டிஸ் கூப்பர், இதுவரை அறியப்பட்டவற்றில் மிகப்பெரிய முதன்மை எண்ணான இதனை 2013 ஜனவரி 25-ல் கண்டுபிடித்தார். 

GIMPS கணினி வேலைத்திட்டத்துக்காக பிரைம் 95 எனும் கணினி மென்பொருள் தயாரிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணினிகளில் இது செயற்படுத்தப்பட்டது. ஜனவரி 25 அன்று இந்த முதன்மை எண், பல்கலைக்கழகக் கணினி ஒன்றிலிருந்து GIMPS சேவையகக் கணினிக்கு அறிவிக்கப்பட்டது.இதனைக் கண்டுபிடிப்பதற்காக இந்தக் கணினிகள் 39 நாட்கள் தொடர்ந்து ஓய்வில்லாமல் செயல்பட்டன. 

இதுவரை
 
இந்த எண் மூன்று தனித்தனி சரிபார்ப்புகள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதற்காக சக்திவாய்ந்த கணினி வன்பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. ஏழு நாட்கள் வரை இவை தொடர்ந்து இயங்கின. கூப்பர் இதற்கு முன் ஸ்டீபன் பூன் என்பவரோடு இணைந்து வேறு இரண்டு மேர்சேன் முதன்மை எண்களைக் கண்டுபிடித்துள்ளார். டிசம்பர் 2005-லும், செப்டம்பர் 2006-லும் அவை கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை 48 மேர்சேன் முதன்மை எண்கள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

எத்தனை கனவுகள் தொலையும்?

எத்தனை கனவுகள் தொலையும்?

 
 
நான் 25 ஆண்டுகளுக்கு முன்பாக 10-ம் வகுப்பில் கணிதத்தில் 100க்கு 100 –ம் அறிவியலில் 85 –ம் பெற்றேன்.11-வது வகுப்பு படிக்க நான் வணிகவியல் கேட்டேன். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை என்னைப் பார்த்து”ஏன் கடைசி குரூப் (?) கேட்கிறாய்?” என்று கேட்டார். (அதென்ன ‘முதல்’ குரூப், ‘கடைசி’ குரூப்?) என்று குழம்பினேன். 

இந்தப் பிரிவினைவாதமும், பாகுபாடும் அதோடு நிற்கவில்லை. பள்ளித் தலைவி, விளையாட்டுத் தலைவி,பள்ளி விருந்தினர்களுக்கு வரவேற்பு என எல்லா விதிகளுக்குமே “ கூப்பிடு அந்தச் சயின்ஸ் குரூப்பை” என்பதுதான் பள்ளி வாழ்க்கையின் மாறாத விதி ஆகிவிட்டது. மற்ற வகுப்பு மாணவிகளின் கண்களில் நாங்கள் வேற்றுக் கிரகவாசிகள். 

15 வருடங்களுக்கு முன் 
 
என் அக்கா மகள் என்னிடம் “ 10-ம் வகுப்பில் கம்மி மார்க் வாங்கின மக்குப் பசங்கதான் காமர்ஸ் குரூப்ல இருப்பாங்கன்னு எங்க டீச்சர் சொன்னாங்க. நீங்களும் கம்மியா?” என என்னைக் கேட்டாள். நான் விளக்கினாலும் அவளுக்கு டீச்சர் சொல்லே வேதவாக்கானது. 

இரண்டு வருடங்களுக்கு முன் .. என் மகள் 10-ம் வகுப்பில் 95 சதவீத மதிப்பெண்கள் எடுத்தாள்.பெரிய பதவியில் இருக்கிற எனது உறவினர் “சயின்ஸ் குரூப் சேர்ந்திருங்க” என்றார். ஆனால் என் மகள் “ இல்லை. நான் மேனேஜ்மெண்ட் குரூப்தான் சேரப்போறேன்”னு தெளிவாகச் சொல்லிட்டாள். 

ஏன்?
 
காலங்காலமாக ஏன் இந்த ஏற்றத்தாழ்வு? அறிவியல் அல்லாத பாடப் பிரிவுகளை எடுப்பவர்களைச் “சராசரிக்கும் கீழே” என மதிப்பிடும் மனப்பாங்கு மாற வேண்டாமா? தனக்கு எதில் ஆர்வம் என்பதை விடத் தன்மீது திணிக்கப்படுவதைப் பல மாணவர்கள் படிக்க வேண்டியுள்ளது. 

சில வருடங்களுக்கு முன் பிரேமா என்ற பெண் சிஏ படிப்பில் சாதித்தார். எத்தனை பிரேமாக்கள் தங்கள் கனவுகளைத் தொலைத்துள்ளனரோ?

 

Friday, 14 November 2014

உச்சரிப்புக்கான இணையதளம்

உச்சரிப்புக்கான இணையதளம்

ஒவ்வொரு மொழியிலும், எந்த வார்த்தையை, எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்ட ஒரு இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவை எனும் தலைப்பின் கீழ் 6 மொழிகள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை எனும் தலைப்பின் கீழ் 11 மொழிகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை எனும் தலைப்பின் கீழ் 6 மொழிகள், 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவை எனும் தலைப்பின் கீழ் 25 மொழிகள், 500க்கும் மேற்பட்டவை எனும் தலைப்பின் கீழ் 46 மொழிகள் இடம் பெற்றிருக்கின்றன.
ஒலிப்புகள் (Pronounce) எனும் தலைப்பில் சொடுக்கினால் கிடைக்கும் பக்கத்தில் மொழி எனும் தலைப்பில் நாம் மொழியைத் தேர்வு செய்தால் வார்த்தைகளின் பட்டியல் கிடைக்கிறது. 

ஆண்,பெண் குரல் 

அனைத்து வார்த்தைகளின் உச்சரிப்புகளையும் கேட்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண் குரல், பெண் குரல் எனும் இரு வழியிலான வசதிகளும் உள்ளன. ஆங்கிலம் போன்ற பல நாடுகளின் பயன்பாட்டிலுள்ள மொழிகளுக்குச் சில நாடுகளின் வாரியான உச்சரிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. 

இந்தத் தளத்தில் இடம் பெற்றிருக்கும் சில வார்த்தைகளுக்கு உச்சரிப்பு வசதி இல்லாத நிலையில் அதைப் பதிவேற்றம் செய்வதற்கான வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஏற்கனவே இடம் பெற்றிருக்கும் வார்த்தை உச்சரிப்பைப் போல் நாம் புதிய உச்சரிப்பைப் பதிவேற்றம் செய்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் மொழியும் 
 
இங்கு ஒவ்வொரு மொழியிலும் புதிய வார்த்தைகளையும், அதற்கான உச்சரிப்புகளையும் பதிவேற்றம் செய்ய முடியும். 

இங்கு, தமிழ் மொழியில் இதுவரை 1925 வார்த்தைகள் பதிவேற்றம் செய்யப் பெற்றிருக்கின்றன. இவற்றில் 387 வார்த்தைகளுக்கு உச்சரிப்புப் பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கிறது. தமிழ் மொழியில் ஆர்வமுடையவர்கள் தமிழ் வார்த்தைகளை இங்குப் பதிவேற்றம் செய்யலாம். தமிழ் மொழியைச் சரியாக உச்சரிக்கும் நல்ல குரல் வளமுடையவர்கள் தங்களுடைய குரலில் உச்சரிப்புகளைப் பதிவேற்றம் செய்யலாம். 

இத்தளத்தில் அனைத்து மொழியிலான வார்த்தை உச்சரிப்புகளையும் கேட்க விரும்பினாலும், தங்கள் மொழி தொடர்புடைய வார்த்தை உச்சரிப்புகளைப் பதிவேற்றம் செய்ய விரும்பினாலும் பயனராகப் (User) பதிவுசெய்துகொள்ள வேண்டும். இலவசமாய்ப் பதிவுசெய்து பல்வேறு மொழிகளிலான சரியான வார்த்தை உச்சரிப்பைக் கேட்டு நாமும் வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கலாம்.

உலக மொழிகளின் சரியான வார்த்தை உச்சரிப்புக்கு வழிகாட்டும் இந்தத் தளத்திற்குச் செல்ல http://www.forvo.com/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

 

Wednesday, 12 November 2014

அழகானது கணிதம்

அழகானது கணிதம்

 

 

தலை சிறந்த தத்துவ ஞானியும், கணிதப் பேராசிரியராகவும் சமூகப் போராளியாகவும் திகழ்ந்த பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறுவார்: கணிதம் உண்மையைக் கூறுவது மட்டுமல்ல, அளவிலா அழகு படைத்தது, ஓர் ஒப்புயர்வற்ற சிற்பம் போல கணிதம் அழகுமிக்கது. ராமானுஜனின் இங்கிலாந்து சக கணித அறிஞர் ஹார்டி சொன்னார்: கணிதம் அழகின் உருவம். அழகிலா கணிதம் என்று ஒன்றில்லை. 

சமன்பாடுகள்
 
எண்களில் அமைந்துள்ள ஒழுங்கைப் பற்றிப் பலரும் ஆய்ந்திருக்கிறார்கள்.அவர்களில் பலரும் கணிதத்தில் பட்டம் பெற்றவர் அல்லர். அவர்கள் கணிதத் துறையோடு சம்பந்தப்பட்டவர்களும் அல்லர். பொழுதுபோக்காக எண்களையும், அவற்றில் உள்ள சிறப்புகளையும் கண்டறிய முற்பட்டுப் பல அற்புதங்களை வெளிப்படுத்தியுள்ளனர். நான் சிலவற்றை விவரிக்கிறேன். இவை என்னுடைய கண்டுபிடிப்புகள் அல்ல.
கீழ்க்காணும் எண் சமன்பாடுகளைச் சரிபார்க்கவும். இடப்புறமும் வலப்புறமும் சமமாக இருக்கின்றதா என்று காணவும். 

1+2 = 3

4+5+6 = 7+8 

9+10+11+12 = 13+14+15 

16+17+18+19+20 = 21+22+23+24 

அடுத்த வரி என்னவென்று ஊகிக்க முடியுமா?
10-ஆவது வரியைக் காண முடியுமா?
மேலே உள்ள வரிசைகளின் முதல் உறுப்புகள் முறையே 1, 4, 9, 16. இவற்றுக்கும் எண்வரிசைக்கும் தொடர்பு ஏதேனும் உண்டா?
இடப்புறம் உள்ள எண்களின் எண்ணிக்கைக்கும் வலப்புறம் உள்ள எண்களின் எண்ணிக்கைக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா?
எண்களை வரிசைப்படுத்தலி லும், கூட்டல் போடவும் இது ஒன்றாம் வகுப்பு மாணவருக்கு நல்ல பயிற்சியாகும். வர்க்க எண்கள் பற்றி அறிந்ததும் எந்த வரிசையும் காண இயலும். 10-ம் வகுப்பு மாணவர் n-ஆவது வரிசை எழுத முயல்க. 

எண் தொடர்புகள்
 
இப்போது கீழ்க்காணும் எண் தொடர்புகளைச் சரிபார்க்கவும். 

32 + 42 = 52
 
102 + 112 + 122 = 132 + 142 +152
 
212 + 222 + 232 + 242 = 252 + 262 +272
 
அடுத்த வரிசையைக் கூற முடியுமா? கொஞ்சம் யோசிக்கவும். முடியவில்லை என்றால் இதோ நானே கொடுத்துவிடுகின்றேன். 

362 + 372 + 382 + 392 + 402 = 412 + 422 + 432 + 442
 
இடது, வலது பக்கக் கூட்டுத் தொகைகள் சமமாக இருக்கின்றனவா? அடுத்த வரிசை காண முடிகிறதா? இல்லையென்றால் வரிசைகளின் முதல் உறுப்புகளான 3, 10 , 21 , 36 ஆகியவற்றையோ அல்லது இடப்புறத்தில் கடைசி உறுப்புகளான 4, 12, 24, 40 ஆகியவற்றையோ உற்றுப் பார்த்து அவற்றிடையே உள்ள உறவைக் காணுங்கள். அடுத்த வரி எழுத முடியும். 10-ம் வகுப்பு மாணவர் எந்த வரிசையையும் எழுத முடியும். 

சில சிறப்புகள் 
 
சில எண்களில் மறைந்துள்ள சிறப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பார்த்து ரசியுங்கள். நீங்கள் இது போன்று ஏதேனும் காண முற்பட்டுள்ளீர்களா, இல்லையென்றால் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். 

2025 = 452 ; 45 = 20+25 

3025 = 552 ; 55 = 30+25 

1233 = 122 + 332
 
8833 = 882 + 332
 
153 = 13 + 53 + 33
 
370 = 33 + 73 + 03
 
371 = 33 + 73 + 13
 
407 = 43 + 03 + 73
 
333667001 = 3333 + 6673 + 0013
 
இத்தகைய விந்தை எண்களைக் கண்ட காப்ரேகர் உள்ளிட்ட கணித ஆர்வலர்கள் கணினி, கால்குலேட்டர் காலத்திற்கு முன்னர் பென்சிலும், காகிதமும் வைத்துக் கொண்டு பல மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்தார்கள் என்றால் அவர்களது ஆர்வத்தை என்னவென்பது? ஆக, கணிதம் எனும் அழகை ஆராதியுங்கள். கணிதம் இனிக்கும். ஆனால் தெவிட்டாது.

 

Tuesday, 11 November 2014

நீங்க பண்றது ரொமான்ஸா, ப்ரொமான்ஸா?

நீங்க பண்றது ரொமான்ஸா, ப்ரொமான்ஸா?

 

 

“எனக்கு உள்ள கடமைகளை எல்லாம் என் காதலியிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு பட்டியலிட்டேன். “Don’t make an !@#$%^&* of yourself’’ என்று கூறினாள். நான் மிகவும் பாரம் சுமப்பதால் அப்படிச் சொன்னாளா?’’ என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். 

மன்னிக்கவும் வாசகரே. “Don’t make an !@#$%^&* of yourself’’ என்றால் “பிறர் சிரிக்கும்படி முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதே’’ என்றுதான் அர்த்தம். 

மிரளாதீர்கள்
 
விலங்குகளுக்கு நம் பேச்சு மொழியில் தனி இடம் உண்டு. சிவ பூஜையில் கரடி, பசுத்தோல் போர்த்திய புலி, தரையில் விழுந்த மீன் இப்படிப் பல உதாரணங்கள். 

ஆங்கிலத்திலும் அப்படித்தான். 

கழுதைதான் என்றில்லை வேறு பல விலங்கினங்களும் சில சமயம் நேரடி அர்த்தத்திலும் சில சமயம் வித்தியாசமான அர்த்தத்திலும் ஆங்கில மொழியில் பயன்படுத்தப்படுகின்றன.
சிலவற்றைப் படித்தவுடனேயே அவற்றின் பொருளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

Kill two birds with one stone என்றால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
Birds of a feather flock together என்றால்? ‘Birds of a feather’ என்றால் ஒரே தன்மை கொண்டவர்கள் என்று அர்த்தம். அப்படிப்பட்டவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார்கள் என்பதுதான் அந்த வாக்கியத்தின் பொருள். “Like a red flag to a bull’’ என்றால் மிரள வைப்பது என்று அர்த்தம். “Social butterfly’’ என்றால் நிறைய நண்பர்கள் கொண்ட ஒருவரைக் குறிக்கும். 

ஆனால் வேறு சிலவற்றுக்கு அர்த்தம் கொஞ்சம் வித்தியாசமானவை. 

உள்ளுணர்வு - எலி
 
“Chicken feed’’ என்றால் மிகக் குறைவான அல்லது மிக அற்பமான என்று பொருள். This amount is chicken feed for me. 

“Dog in the manger’’ (மேனேஜர் என்று படித்து விடாதீர்கள்) நம் ஊரில் ‘வைக்கோல்போர் நாய்’ என்பார்களே அதேதான். நாய் தானும் வைக்கோலைத் தின்னாது. வைக்கோலைத் தின்ன வரும் பசுவையும் தின்னவிடாமல் குரைக்கும். இதுபோன்ற குணம் உள்ளவர்களை மேலே குறிப்பிட்டதுபோல அழைப்பார்கள். 

“I smell a rat’’ என்றால் “something fishy’’ என்று அர்த்தம். அதாவது எல்லாமே நன்றாக நடப்பதுபோலத் தோன்றினாலும், தவறான ஏதோ ஒரு விஷயம் நடப்பதாக நீங்கள் யூகித்தாலோ அல்லது உங்கள் உள்ளுணர்வு அப்படிக் குரல் கொடுத்தாலோ you smell a rat. 

‘Going to the dogs’ என்று ஒரு நிறுவனத்தைக் குறித்தால், அது நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம் என்று அர்த்தமில்லை. அதன் பொருளாதாரம் சரிந்து கொண்டே வருகிறது என்றுதான் அர்த்தம். 

She turned out to be a snake in the grass என்றால் அது துரோகத்தைக் குறிக்கிறது. அதாவது புல்வெளியில் உள்ள பாம்பு சட்டென்று புலப்படாது. அதுபோல நட்பாகப் பழகிய ஒருத்தி சட்டெனத் துரோகம் செய்தால் அவளை இப்படிக் குறிப்பிடலாம். (‘அவனுக்கும்’ இது பொருந்தும்). 

தண்டல்காரன்
 
ஆனால் வேறு சிலவற்றுக்கு இப்படியெல்லாம் தர்க்கரீதியாக வியாக்கியானம் கொடுக்க முடியாது. 

எடுத்துக்காட்டு: “It is raining cats and dogs’’. என்றால் மழை கடுமையாகப் பெய்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். 

“Keeping the wolf from the door’’ என்றால் போதிய பணம் (மட்டுமே) இருக்கிறது என்று பொருள். 

Kangaroo court என்றால் ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்பதுபோல் ஆளாளுக்குச் சட்டத்தை எடுத்துக் கொண்டு ‘நீதி’ வழங்குவது. 

“I got it straight from the horse’s mouth’’ என்றால், நேரடியாகச் சம்பந்தப்பட்டவரிடமிருந்தே இதை நான் கேள்விப்பட்டேன் என்று பொருள். 

BROMANCE
 
“Bromance என்று ஒரு வார்த்தை கேள்விப்பட்டேன். அதற்கு என்ன அர்த்தம்?’’ என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். 

Brother, Romance ஆகிய இரு வார்த்தைகளின் சேர்க்கைதான் Bromance. 

அதாவது இரு ஆண்கள் ஒருவரோடொருவர் அதிக நேரம் செலவழிக்க விருப்பப்பட்டால் அதை bromance எனலாம். மனம் விட்டுப் பேச முடிகிறது, இன்னொருவரைப் புரிந்து கொண்டு ஆதரவாக இருப்பது என்பது இதில் அடக்கம். மற்றபடி இதில் செக்ஸ் கோணம் எதுவும் கிடையாது. 

TORTUROUS - TORTUOUS
 
இரண்டுமே ‘Torquere’ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவானவை. இந்த வார்த்தைக்கு ‘வளைத்தல்’ என்று பொருள். 

Tortuous என்ற வார்த்தை இந்த நேரடி அர்த்தத்தைத் தருகிறது. அதாவது பேச்சில் நேரடியாக இல்லாமல் வளைத்து வளைத்துப் பேசும்போதோ, மறைமுகமாகக் குத்திக் காட்டும்போதோ அதை Tortuous speech என்று சொல்வார்கள். மிக நீளமான ஒரு சாலை. எக்கச்சக்கமான சிறுசிறு வளைவுகளையும் கொண்டிருந்தால், அதை Tortuous road என்று கூறுவதுண்டு.
Torturous எனும்போது அது பாதிப்பை உண்டாக்குதல், கொடுமைக்கு உள்ளாக்குதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது torture.
போதாக்குறைக்கு Tortious என்றும் ஒரு வார்த்தை உண்டு. இது சட்டம் தொடர்பானது. அதாவது Tort எனப்படும் குற்றம் தொடர்பானது (Tort என்பதற்கும் Crime என்பதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் இதுதான். Crime என்பது தண்டனையை அளிக்கக்கூடிய ஒரு செயல். நிஜமாகவே வேறு ஒருவருக்குப் பாதிப்பை உண்டாக்கி இருக்கக் கூடியது. ஆனால் tort என்ற அத்துமீறலைப் புரிந்தால், அபராதம் செலுத்தினால் போதுமானது. இன்னொருவரின் நிலத்தில் நீங்கள் நுழைவதும், நடப்பதும் tort. சம்பந்தப்பட்டவருக்கு இதில் ஒரு பாதிப்பும் இல்லையே என்று நீங்கள் கூறித் தப்பித்துவிட முடியாது).

 

டாக்டர் பட்டத்தை ஆடிக்காட்ட முடியுமா?

டாக்டர் பட்டத்தை ஆடிக்காட்ட முடியுமா?

 

ஆடல், பாடல்களில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கலாம். ஆனால் நீங்கள் வாங்கிய உங்களின் டாக்டர் பட்டத்துக்கான ஆய்வுப்பொருளை நடனமாடிக் காட்ட முடியுமா? 

என்ன இது உளறல் என்கிறீர்களா? அமெரிக்காவில் உயிரியலில் டாக்டர் பட்டத்துக்காக ஆய்வு செய்யும் ஒரு மாணவி தனது ஆய்வை நடனக் குழுவினரோடு ஆடிக்காட்டி பரிசு பெற்றுள்ளார். 


இந்திய மாணவி
 
சயின்ஸ் ஜர்னல் எனும் இணையதளம் டான்ஸ் யுவர் பி.எச்டி எனும் போட்டியை ஏழு ஆண்டுகளாக நடத்திவருகிறது. உயிரியல் உள்பட விஞ்ஞானத்தின் சில பிரிவுகளில் செய்யப்படும் முனைவர் பட்ட ஆய்வுகளை நடனமாக மாற்றி நடத்திக் காண்பித்து போட்டியில் பங்கேற்போருக்கு ரொக்கப் பரிசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப் படுகின்றன. அதில் அமெரிக்காவில் உள்ள ஏதென்ஸ் நகரில் உள்ள ஜோர்ஜியா பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய வம்சாவளி மாணவியான உமா நாகேந்திரா பரிசு பெற்றுள்ளார். 

புயலின் விளைவு
 
உமாவின் பெற்றோர் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்சில் உள்ள லூசியானா நகரில் வசிக்கின்றனர். அந்த நகரில் புயல் காற்றுகளும் சூறாவளிகளும் சகஜம். அந்த நகரை 2005-ல் காத்ரினா புயல் தாக்கிப் பேரழிவை ஏற்படுத்தியது. அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை உமா ஆராய்ந்துள்ளார். அந்தப் பாதிப்புகளி லிருந்து எப்படி இயற்கை தன்னை புதுப்பித்துக் கொள்கிறது என்று அவர் ஆராய ஆர்வம் கொண்டார். 

கட்டிடங்களையும் வாகனங்களையும், மரங்களையும் தூக்கி வீசிப் பேரழிவை ஏற்படுத்துகிற சூறைக்காற்று இயற்கைக்கும் தாவரங்களுக்கும் சில நன்மைகளையும் ஏற்படுத்து கின்றன என அவர் ஆய்வுகள் மூலம் அறிந்துள்ளார்.

முதன்மைப் பரிசு 

இயற்பியல், வேதியியல், சமூக விஞ்ஞானம், ஆகிய துறைகளில் செய்யப்பட்ட முனைவர் பட்டங்களும் நடனமாக ஆடிக்காட்டப்பட்டன. அவற்றிலும் பரிசுகள் தரப்பட்டுள்ளன. உயிரியல் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த போட்டிகளிலும் சிறப்பானதாக உமா குழுவினரின் நடனம் இருந்ததால் அவருக்கு முதன்மைப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ரொக்கப் பரிசும் ,அமெரிக்காவின் ஸ்டென்போர்டு பல்கலைக்கழகத்தில் அவரது நடன வீடியோ திரையிடும்போது அங்கு செல்லக் கட்டணமும் அளிக்கப்படும். உமாவின் ஆய்வுகள் புயல் மற்றும் சூறைக்காற்றின் விளைவுகளை மேலும் ஆழமாகப் பார்க்க உயிரியல் பாடத்தின் ஆசிரியர்களுக்குத் தகவல்களை தரும்.
நடனத்தை ரசிக்க: https://www.youtube.com/watch?v=rWj-50qYmDM

 

விளையாட்டுப் பசங்க அறிவாளி இல்லையா?

விளையாட்டுப் பசங்க அறிவாளி இல்லையா?

 

அன்றைக்கும் அர்ஜுன் அதே தவறைச் செய்து கொண்டிருந்தான். வகுப்பில் இருந்த அனைவரும் அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு இருந்தோம். ஆனால் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத ரங்கசாமி சார் கணக்குப் புத்தகத்திலிருந்து ஒரு சிக்கலான சமன்பாட்டைத் தேர்ந்தெடுத்துக் கரும்பலகையில் பிரித்து மேய்ந்துகொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் கழித்துக் கரும்பலகையை விட்டு சற்றே விலகி உட்கார்ந்திருக்கும் எங்கள் பக்கம் திரும்பினார். அர்ஜுனைப் பார்த்ததும், அவர் கண்கள் சிவந்தன. கடுப்பின் உச்சத்துக்குப் போய்விட்டார். 

அவன் வகுப்பைக் கவனிக்காமல் எல்லோரோடும் பேசிக்கிட்டு இருந்தால்கூடப் பொறுமையாக இருந்திருப்பார். பக்கத்தில் பார்த்து காப்பி அடித்திருந்தால் கூட மன்னித்திருப்பார். ஆனால் அவரால் கொஞ்சமும் சகிக்க முடியாத காரியத்தை அவன் செய்துவிட்டான். “இன்னைக்கும் என் வகுப்பில் தூங்கிட்டியா அர்ஜுன்?” என்று கூச்சலிட்டுத் தன் கையிலிருக்கும் சாக்பீஸை அவன் மீது விட்டெறிந்தார். திடுக்கிட்டுக் கண் விழித்த அவன் பாவமாகப் பார்த்தான். “வகுப்பறையை விட்டு வெளியே போ!” என்று சொல்லிவிட்டு மீண்டும் கரும்பலகையோடு தன் உரையாடலை தொடர்ந்தார். 

முட்டாளா, அறிவாளியா?
 
என் பள்ளித் தோழன் அர்ஜுன் சோம்பேறி அல்ல. சொல்லப் போனால் சிறந்த விளையாட்டு வீரன். கபடி போட்டியில் அவனை வெல்ல எங்கள் சுற்றுவட்டார பள்ளிகளில்கூட யாரும் கிடையாது. கபடி விளையாட்டு எத்தகைய சுறுசுறுப்பான ஒன்று, அதில் சாம்பியனாகத் திகழும் அவன் எப்போதுமே துரு துருவென்றுதான் இருப்பான். 

ஆனால் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் தூங்கிவிடுவான். “ஏண்டா இப்படித் தூங்குறே?” என நான்கூட அவனிடம் கோபமாகக் கேட்டிருக்கிறேன். அதற்கு அவன், “எனக்குத் தெரியலை பா… சார் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிட்டா தானா தூக்கம் வருது” எனச் சொல்வான். இவனுக்கு ரொம்ப திமிர் என்றுதான் எனக்கும் தோன்றியது.
ஆனால், இப்போது உளவியல் நிபுணர் கார்டனரின் பன்முகத்திறன் கோட்பாட்டை ஆழ்ந்து படிக்கும்போது இதுவரை புலப்படாத பல விஷயங்கள் புரிகின்றன. குறிப்பாகக் கல்வி கற்கும் முறையில் நம்மிடையே இருக்கும் பல தவறான புரிதல்களை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். “ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமானவர். ஒவ்வொருவரிடத்திலும் பல விதமான அறிவுத் திறன்கள் இருக்கின்றன என தெரிந்த பின்பும், எல்லோரையும் ஒரே பார்வையில் அணுகுவது மிகவும் மோசமான, நியாயமற்ற கல்வி முறை என்பேன்.” என்கிறார் கார்டனர். 

இன்றைய கல்வி முறையை ஒரு விதமான புத்திசாலித்தனத்தை மட்டும் அங்கீகரிக்கும் லா ப்ரஃபஸர் மைன்ட் (Law Professor mind) என விமர்சிக்கிறார். “உன்னிடம் கணித அறிவும், மொழியியலும் சிறப்பாக இருந்தால் நீ அறிவுஜீவி. இவை அல்லாமல் வேறு விதத்தில் நீ இருப்பாய் என்றால் உனக்கு இங்கு இடமில்லை” என்னும் குறுகலான பார்வைதான் அந்த லா ப்ரஃபஸர் மைன்ட் என்கிறார் கார்டனர். 

சும்மா நிற்க முடியாது
 
விளையாட்டு வீரனான அர்ஜுனிடம் காணப்படுவது உடல் ரீதியான அறிவுத் திறன். அதற்கு கார்ட்னர் சூட்டியிருக்கும் பெயர் கைனெஸ்தடிக் (kinesthetic) அறிவுத் திறன். அத்திறன் பெற்றவர்கள் உடல் அசைவில் நாட்டம் கொண்டிருப்பார்கள். அவர்களால் தொடர்ந்து ஒரு இடத்தில் சும்மா நிற்கவோ, உட்காரவோ முடியாது. தொடர்ந்து எதாவது செயல் புரிவார்கள். விளையாடுதல், நடனமாடுதல் போன்றவை அவர்களுக்கு மிகப் பிடித்தமான விஷயங்களாக இருக்கும். 

ஒன்றைக் கற்றுக்கொள்ளப் புத்தகம் படிப்பது, விரிவுரை கேட்பதை விடவும் தானே சோதனை செய்து பார்க்க விரும்புவார்கள். சொல்ல நினைக்கும் கருத்தை உடல் அசைவு மூலம் வெளிப்படுத்தும் ஆவல் அவர்களிடம் காணப்படும். பேசத் தொடங்கும்போது அவர்கள் உதட்டிலிருந்து வார்த்தைகள் வெளி வருவதற்கு முன்னால் அவர்கள் கைகளும், விரல்களும் அசையத் தொடங்கிவிடும். உடல் மொழியில் பிறர் கவனத்தை ஈர்ப்பார்கள். அதே முறையில் அவர்களோடு தொடர்பு கொள்பவர்களோடு உற்சாகமாகப் பழகுவார்கள். 

“உடல் ரீதியான திறன் படைத்த ஒருவருக்கு அதே வழியில் கல்வி கற்பிப்பதுதான் சிறந்த வழியாகும். அவர் திறனுக்கு மாறான முறைகள் மூலம் கல்வி பயிற்றுவிக்கும் போது, அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்” என்கிறார் கார்டனர். ஒருவருடைய பலம் எதுவோ அதுவே அவர் கற்கும் ஊடகம். அவருடைய பலவீனத்தின் வாயிலாக அவரால் பெரிதாக எதையும் கற்க முடியாது. 

இதைப் புரிந்து கொள்ளாமல் வழக்கமான கல்வி கற்கும் பாணியை அவரும் பின்பற்ற வேண்டும் என வற்புறுத்தினால் அவர் தோல்வியைத்தான் சந்திப்பார் எனக் கூறுகிறார் கார்டனர். இத்தகைய காரணத்தால் தான் கைனெஸ்தடிக் திறன் கொண்ட என் தோழன் அர்ஜுன் அன்று வகுப்பறையில் தூங்கிப் போனான் போலும்.

விளையாட்டாய் பாடங்கள்
 
இதை எழுதும்போது சட்டென்று ஒரு தொலைக்காட்சி விளம்பரம் என் நினைவிற்கு வருகிறது. சிறுமி ஒருத்தி தெருவில் பாண்டி ஆட்டம் விளையாடிக் கொண்டிருப்பாள். உற்றுப் பார்த்தால் அவள் பள்ளிப் பாடங்களை ஒவ்வொரு கட்டத்திலும் எழுதிவைத்து, விளையாட்டின் ஊடாகத் தன் பாடங்களைப் பயின்று கொண்டிருப்பாள். அதைக் காணும் அவள் தாய் தன் குழந்தை விளையாடும்போதுகூட படிப்பையே நினைக்கிறாளே! 

அவளுக்குத்தான் படிப்பின் மீது எத்தனை நாட்டம் எனப் பூரித்துப் போவார்.
சத்துணவு பானம் பற்றிய அந்த விளம்பரம் தொடரும். ஆனால் நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பது இதன் உல்டா. அதாவது விளையாட்டில் நாட்டம் கொண்ட ஒருவர் அதே விளையாட்டின் வழியாக வழக்கமான பாடங்களைக் கற்க முடியும் என்பது. அப்படியானால் கைனெஸ்தடிக் திறன் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. தொடர்ந்து விளையாட்டாகத் தெரிந்துகொள்வோம்.

 

Monday, 3 November 2014

அர்த்தமும் அனர்த்தமும்

அர்த்தமும் அனர்த்தமும்

சமீபத்தில் சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு ஆங்கிலப் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது அதன் தாளாளர் நகைச்சுவையாக ஒரு சம்பவத்தை (கதையை) மாணவர்களிடம் விவரித்தார். “I will give you a ring tomorrow’’ என்று ஓர் ஆசிரியரிடம் அவர் கூற, அந்த ஆசிரியர் ஆர்வத்துடன் விரலைத் தடவியபடி தங்க மோதிரத்துக்காகக் காத்திருந்து, தொலைபேசி அழைப்பை மட்டும் பெற்று ஏமாந்தாராம். (தினசரிப் பேச்சுவார்த்தையில் give a ring என்பது தொலைபேசியில் அழைப்பது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்). 

அர்த்தமும் அனர்த்தமும்
 
சில ஆங்கில வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொண்டால் கோபமோ, வருத்தமோ உண்டாவது சகஜம்தான். 

உறவினர் வீட்டுக்கு நண்பரோடு சென்றிருந்தேன். ஏற்கெனவே நண்பரை அறிந்திருந்த உறவினர் “He is a man of his words’’ என்று புகழ்ந்து பேசினார். வீடு திரும்பும்போது நண்பரின் முகம் சிறுத்துக் காணப்பட்டது.
“நான் என்ன பேச்சோடு சரியா? காரியத்திலே சைபரா?’’ என்றார். பிறகு அவருக்கு விளக்கினேன். Man of his words என்றால் நம்பகத் தன்மையோடு பேசுபவர் என்ற அர்த்தம் என்று விளக்கினேன். இயல்பானார்.
ஒருவரின் செல்போன் தொலைந்து விட்டது. அவருடைய நண்பர் அதைப் பல இடங்களிலும் தேடிப் பார்த்தார். தொலைத்தவர் நண்பரைப் பற்றி “He spared no efforts’’ என்று கூற, மனம் வெறுத்துப் போனார் நண்பர். அதற்கு அவசியமில்லை. அந்த வாக்கியத்துக்கு “எந்த முயற்சியும் எடுக்கவில்லை’’ என்ற அர்த்தமில்லை. “எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை’’ என்ற பாசிட்டிவான பொருள்தான். 

விஷமமும் விபரீதமும்
 
இதோ ஒரு கற்பனைச் சம்பவம். வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினர் மெத்தப் படித்த மகனும், மருமகளும். “என்னம்மா கோகுல் ரொம்ப விஷமம் பண்ணாமல் இருந்தானா?’’ என்று அவர்கள் கேட்க, பேரனைப் பாதுகாத்துக் கொண்டிருந்த பாட்டிக்கு ஏனோ தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. அவன் செய்த விஷமங்களைப் பட்டியல் இடத் தொடங்கினார். “Gokul kicked the bucket’’ என்று கூற, மருமகள் வீலென்று அலற, பிறகுதான் விவரத்தைப் புரிந்து கொண்டனர். ஆங்கிலத்தில் ‘Kicked the bucket’ என்றால் இறந்துவிட்டார் என்று பொருள். (ஒருவேளை முன்னொரு காலத்தில் தூக்கிலிடும்போது மரண தண்டனைக் கைதியின் காலுக்குக் கீழே உள்ள பக்கெட்டை எட்டி உதைத்து விடுவார்களோ?) 

உங்கள் வீட்டில் தங்கியவர் வேறிடத்துக்குச் சென்றுவிட்டார் என்றால் “He is no more here’’ என்று சொல்லுங்கள் தப்பில்லை. ஆனால் மறந்து போய் more என்பதற்கும் here என்பதற்கும் நடுவே பெருத்த இடைவெளியை விட்டுத் தொலைக்காதீர்கள். ‘இங்கு இல்லை’ என்பதற்குப் பதிலாக ‘உலகத்திலேயே இல்லை’ என்கிற அர்த்தம் தோன்றிவிடும்.
“Break a leg” என்றால் காலை உடைத்துக் கொள் என்று அர்த்தமில்லை. “All the best”, “நல்லாப் பண்ணு” என்பது போன்ற அர்த்தம்தான் அதற்கு. நாடகத்தில் நடிப்பவர் களுக்குதான் இந்த வகை வாழ்த்து (?) தொடக்கத்தில் கூறப்பட்டு வந்தது. 

பதவியையும் செல்வாக்கையும் பயன்படுத்தி குறுக்குவழியில் காரியத்தைச் சாதித்துக் கொள்பவர்கள் உண்டு. They throw their weight around. (அதாவது அதிக எடை கொண்டவர்கள் என்பதில்லை. ‘அவர் வெயிட்டான பார்ட்டி’ என்று சொல்கிறோமே அந்த அர்த்தம்). 

எடுத்துக்காட்டும் சுருக்கமும்
 
e.g. மற்றும் i.e. ஆகிய இரண்டு பயன்பாடுகளுக்கும் முக்கிய வித்தியாசம் உண்டு. 

லத்தீன் மொழியிலுள்ள ‘Exemply–gratia’ என்பதன் சுருக்கம்தான் e.g. இதற்குப் பொருள் ‘எடுத்துக்காட்டாக’ என்பதாகும். அதாவது பல உதாரணங்களைக் கூற முடியும்போது அவற்றில் ஒன்றைக் கூறுவது. 

History has seen great orators. e.g. Vivekananda.
Many diseases are spread by mosquitoes. e.g. Malaria 

லத்தீன் மொழியிலுள்ள idest (சுருக்கமாக i.e.) என்பதன் அர்த்தம் that is. அதாவது கொடுக்கப்பட்டுள்ள உதாரணம் மட்டுமே அந்த விளக்கத்துக்கு இருக்க முடியும். America was named after the person who discovered it, i.e. Amerigo Vespucci.
Lethal – Fatal
Fatal accident என்று அடிக்கடி நாளிதழில் பார்க்கிறோம். Fatal என்றால் – இறப்பில் முடிந்த என்ற அர்த்தம். அதாவது அந்த விபத்தில் யாரோ இறந்திருக்கிறார்.
Lethal என்பதும் கிட்டத்தட்ட இதே அர்த்தம் கொண்டதுதான். என்றாலும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. Lethal என்றால் இறப்பு நேர்ந்து விட்டது என்று அர்த்தம் அல்ல. இறப்பு உண்டாக வாய்ப்பு உண்டு என்பதைக் குறிக்கிறது அது. Lethal dose of a medicine என்றால் அந்த மருந்தை உட்கொண்டால் இறப்பு உண்டாக வாய்ப்பு உண்டு. அதாவது இறப்பு நேர்ந்து விடவில்லை. நேரிடலாம். ஆனால் fatal என்றால் இறப்பு நேர்ந்துவிட்டது.
ஆங்கிலத்தின் சரியான அர்த்தத்தை உணராமல், அனர்த்தமாகப் புரிந்துகொண்டு விடக் கூடாது.