விளையாட்டுப் பசங்க அறிவாளி இல்லையா?
அன்றைக்கும் அர்ஜுன் அதே தவறைச் செய்து கொண்டிருந்தான். வகுப்பில் இருந்த
அனைவரும் அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு இருந்தோம். ஆனால் சுற்றி என்ன
நடக்கிறது என்று தெரியாத ரங்கசாமி சார் கணக்குப் புத்தகத்திலிருந்து ஒரு
சிக்கலான சமன்பாட்டைத் தேர்ந்தெடுத்துக் கரும்பலகையில் பிரித்து
மேய்ந்துகொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் கழித்துக் கரும்பலகையை விட்டு சற்றே விலகி
உட்கார்ந்திருக்கும் எங்கள் பக்கம் திரும்பினார். அர்ஜுனைப் பார்த்ததும்,
அவர் கண்கள் சிவந்தன. கடுப்பின் உச்சத்துக்குப் போய்விட்டார்.
அவன் வகுப்பைக் கவனிக்காமல் எல்லோரோடும் பேசிக்கிட்டு இருந்தால்கூடப்
பொறுமையாக இருந்திருப்பார். பக்கத்தில் பார்த்து காப்பி அடித்திருந்தால்
கூட மன்னித்திருப்பார். ஆனால் அவரால் கொஞ்சமும் சகிக்க முடியாத காரியத்தை
அவன் செய்துவிட்டான். “இன்னைக்கும் என் வகுப்பில் தூங்கிட்டியா அர்ஜுன்?”
என்று கூச்சலிட்டுத் தன் கையிலிருக்கும் சாக்பீஸை அவன் மீது
விட்டெறிந்தார். திடுக்கிட்டுக் கண் விழித்த அவன் பாவமாகப் பார்த்தான்.
“வகுப்பறையை விட்டு வெளியே போ!” என்று சொல்லிவிட்டு மீண்டும் கரும்பலகையோடு
தன் உரையாடலை தொடர்ந்தார்.
முட்டாளா, அறிவாளியா?
என் பள்ளித் தோழன் அர்ஜுன் சோம்பேறி அல்ல. சொல்லப் போனால் சிறந்த
விளையாட்டு வீரன். கபடி போட்டியில் அவனை வெல்ல எங்கள் சுற்றுவட்டார
பள்ளிகளில்கூட யாரும் கிடையாது. கபடி விளையாட்டு எத்தகைய சுறுசுறுப்பான
ஒன்று, அதில் சாம்பியனாகத் திகழும் அவன் எப்போதுமே துரு துருவென்றுதான்
இருப்பான்.
ஆனால் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில்
தூங்கிவிடுவான். “ஏண்டா இப்படித் தூங்குறே?” என நான்கூட அவனிடம் கோபமாகக்
கேட்டிருக்கிறேன். அதற்கு அவன், “எனக்குத் தெரியலை பா… சார் கிளாஸ் எடுக்க
ஆரம்பிச்சிட்டா தானா தூக்கம் வருது” எனச் சொல்வான். இவனுக்கு ரொம்ப திமிர்
என்றுதான் எனக்கும் தோன்றியது.
ஆனால், இப்போது உளவியல் நிபுணர் கார்டனரின் பன்முகத்திறன் கோட்பாட்டை
ஆழ்ந்து படிக்கும்போது இதுவரை புலப்படாத பல விஷயங்கள் புரிகின்றன.
குறிப்பாகக் கல்வி கற்கும் முறையில் நம்மிடையே இருக்கும் பல தவறான
புரிதல்களை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். “ஒவ்வொரு மனிதரும்
வித்தியாசமானவர். ஒவ்வொருவரிடத்திலும் பல விதமான அறிவுத் திறன்கள்
இருக்கின்றன என தெரிந்த பின்பும், எல்லோரையும் ஒரே பார்வையில் அணுகுவது
மிகவும் மோசமான, நியாயமற்ற கல்வி முறை என்பேன்.” என்கிறார் கார்டனர்.
இன்றைய கல்வி முறையை ஒரு விதமான புத்திசாலித்தனத்தை மட்டும் அங்கீகரிக்கும்
லா ப்ரஃபஸர் மைன்ட் (Law Professor mind) என விமர்சிக்கிறார். “உன்னிடம்
கணித அறிவும், மொழியியலும் சிறப்பாக இருந்தால் நீ அறிவுஜீவி. இவை அல்லாமல்
வேறு விதத்தில் நீ இருப்பாய் என்றால் உனக்கு இங்கு இடமில்லை” என்னும்
குறுகலான பார்வைதான் அந்த லா ப்ரஃபஸர் மைன்ட் என்கிறார் கார்டனர்.
சும்மா நிற்க முடியாது
விளையாட்டு வீரனான அர்ஜுனிடம் காணப்படுவது உடல் ரீதியான அறிவுத் திறன்.
அதற்கு கார்ட்னர் சூட்டியிருக்கும் பெயர் கைனெஸ்தடிக் (kinesthetic)
அறிவுத் திறன். அத்திறன் பெற்றவர்கள் உடல் அசைவில் நாட்டம்
கொண்டிருப்பார்கள். அவர்களால் தொடர்ந்து ஒரு இடத்தில் சும்மா நிற்கவோ,
உட்காரவோ முடியாது. தொடர்ந்து எதாவது செயல் புரிவார்கள். விளையாடுதல்,
நடனமாடுதல் போன்றவை அவர்களுக்கு மிகப் பிடித்தமான விஷயங்களாக இருக்கும்.
ஒன்றைக் கற்றுக்கொள்ளப் புத்தகம் படிப்பது, விரிவுரை கேட்பதை விடவும் தானே
சோதனை செய்து பார்க்க விரும்புவார்கள். சொல்ல நினைக்கும் கருத்தை உடல்
அசைவு மூலம் வெளிப்படுத்தும் ஆவல் அவர்களிடம் காணப்படும். பேசத்
தொடங்கும்போது அவர்கள் உதட்டிலிருந்து வார்த்தைகள் வெளி வருவதற்கு முன்னால்
அவர்கள் கைகளும், விரல்களும் அசையத் தொடங்கிவிடும். உடல் மொழியில் பிறர்
கவனத்தை ஈர்ப்பார்கள். அதே முறையில் அவர்களோடு தொடர்பு கொள்பவர்களோடு
உற்சாகமாகப் பழகுவார்கள்.
“உடல் ரீதியான திறன் படைத்த ஒருவருக்கு அதே வழியில் கல்வி கற்பிப்பதுதான்
சிறந்த வழியாகும். அவர் திறனுக்கு மாறான முறைகள் மூலம் கல்வி
பயிற்றுவிக்கும் போது, அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்”
என்கிறார் கார்டனர். ஒருவருடைய பலம் எதுவோ அதுவே அவர் கற்கும் ஊடகம்.
அவருடைய பலவீனத்தின் வாயிலாக அவரால் பெரிதாக எதையும் கற்க முடியாது.
இதைப் புரிந்து கொள்ளாமல் வழக்கமான கல்வி கற்கும் பாணியை அவரும் பின்பற்ற
வேண்டும் என வற்புறுத்தினால் அவர் தோல்வியைத்தான் சந்திப்பார் எனக்
கூறுகிறார் கார்டனர். இத்தகைய காரணத்தால் தான் கைனெஸ்தடிக் திறன் கொண்ட என்
தோழன் அர்ஜுன் அன்று வகுப்பறையில் தூங்கிப் போனான் போலும்.
விளையாட்டாய் பாடங்கள்
இதை எழுதும்போது சட்டென்று ஒரு தொலைக்காட்சி விளம்பரம் என் நினைவிற்கு
வருகிறது. சிறுமி ஒருத்தி தெருவில் பாண்டி ஆட்டம் விளையாடிக்
கொண்டிருப்பாள். உற்றுப் பார்த்தால் அவள் பள்ளிப் பாடங்களை ஒவ்வொரு
கட்டத்திலும் எழுதிவைத்து, விளையாட்டின் ஊடாகத் தன் பாடங்களைப் பயின்று
கொண்டிருப்பாள். அதைக் காணும் அவள் தாய் தன் குழந்தை விளையாடும்போதுகூட
படிப்பையே நினைக்கிறாளே!
அவளுக்குத்தான் படிப்பின் மீது எத்தனை நாட்டம்
எனப் பூரித்துப் போவார்.
சத்துணவு பானம் பற்றிய அந்த விளம்பரம் தொடரும். ஆனால் நாம் இப்போது பேசிக்
கொண்டிருப்பது இதன் உல்டா. அதாவது விளையாட்டில் நாட்டம் கொண்ட ஒருவர் அதே
விளையாட்டின் வழியாக வழக்கமான பாடங்களைக் கற்க முடியும் என்பது.
அப்படியானால் கைனெஸ்தடிக் திறன் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை
ஏராளமாக இருக்கின்றன. தொடர்ந்து விளையாட்டாகத் தெரிந்துகொள்வோம்.
No comments:
Post a Comment