Tuesday, 11 November 2014

டாக்டர் பட்டத்தை ஆடிக்காட்ட முடியுமா?

டாக்டர் பட்டத்தை ஆடிக்காட்ட முடியுமா?

 

ஆடல், பாடல்களில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கலாம். ஆனால் நீங்கள் வாங்கிய உங்களின் டாக்டர் பட்டத்துக்கான ஆய்வுப்பொருளை நடனமாடிக் காட்ட முடியுமா? 

என்ன இது உளறல் என்கிறீர்களா? அமெரிக்காவில் உயிரியலில் டாக்டர் பட்டத்துக்காக ஆய்வு செய்யும் ஒரு மாணவி தனது ஆய்வை நடனக் குழுவினரோடு ஆடிக்காட்டி பரிசு பெற்றுள்ளார். 


இந்திய மாணவி
 
சயின்ஸ் ஜர்னல் எனும் இணையதளம் டான்ஸ் யுவர் பி.எச்டி எனும் போட்டியை ஏழு ஆண்டுகளாக நடத்திவருகிறது. உயிரியல் உள்பட விஞ்ஞானத்தின் சில பிரிவுகளில் செய்யப்படும் முனைவர் பட்ட ஆய்வுகளை நடனமாக மாற்றி நடத்திக் காண்பித்து போட்டியில் பங்கேற்போருக்கு ரொக்கப் பரிசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப் படுகின்றன. அதில் அமெரிக்காவில் உள்ள ஏதென்ஸ் நகரில் உள்ள ஜோர்ஜியா பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய வம்சாவளி மாணவியான உமா நாகேந்திரா பரிசு பெற்றுள்ளார். 

புயலின் விளைவு
 
உமாவின் பெற்றோர் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்சில் உள்ள லூசியானா நகரில் வசிக்கின்றனர். அந்த நகரில் புயல் காற்றுகளும் சூறாவளிகளும் சகஜம். அந்த நகரை 2005-ல் காத்ரினா புயல் தாக்கிப் பேரழிவை ஏற்படுத்தியது. அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை உமா ஆராய்ந்துள்ளார். அந்தப் பாதிப்புகளி லிருந்து எப்படி இயற்கை தன்னை புதுப்பித்துக் கொள்கிறது என்று அவர் ஆராய ஆர்வம் கொண்டார். 

கட்டிடங்களையும் வாகனங்களையும், மரங்களையும் தூக்கி வீசிப் பேரழிவை ஏற்படுத்துகிற சூறைக்காற்று இயற்கைக்கும் தாவரங்களுக்கும் சில நன்மைகளையும் ஏற்படுத்து கின்றன என அவர் ஆய்வுகள் மூலம் அறிந்துள்ளார்.

முதன்மைப் பரிசு 

இயற்பியல், வேதியியல், சமூக விஞ்ஞானம், ஆகிய துறைகளில் செய்யப்பட்ட முனைவர் பட்டங்களும் நடனமாக ஆடிக்காட்டப்பட்டன. அவற்றிலும் பரிசுகள் தரப்பட்டுள்ளன. உயிரியல் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த போட்டிகளிலும் சிறப்பானதாக உமா குழுவினரின் நடனம் இருந்ததால் அவருக்கு முதன்மைப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ரொக்கப் பரிசும் ,அமெரிக்காவின் ஸ்டென்போர்டு பல்கலைக்கழகத்தில் அவரது நடன வீடியோ திரையிடும்போது அங்கு செல்லக் கட்டணமும் அளிக்கப்படும். உமாவின் ஆய்வுகள் புயல் மற்றும் சூறைக்காற்றின் விளைவுகளை மேலும் ஆழமாகப் பார்க்க உயிரியல் பாடத்தின் ஆசிரியர்களுக்குத் தகவல்களை தரும்.
நடனத்தை ரசிக்க: https://www.youtube.com/watch?v=rWj-50qYmDM

 

No comments:

Post a Comment