எத்தனை கனவுகள் தொலையும்?
நான் 25 ஆண்டுகளுக்கு முன்பாக 10-ம் வகுப்பில் கணிதத்தில் 100க்கு 100 –ம்
அறிவியலில் 85 –ம் பெற்றேன்.11-வது வகுப்பு படிக்க நான் வணிகவியல்
கேட்டேன். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை என்னைப் பார்த்து”ஏன் கடைசி
குரூப் (?) கேட்கிறாய்?” என்று கேட்டார். (அதென்ன ‘முதல்’ குரூப், ‘கடைசி’
குரூப்?) என்று குழம்பினேன்.
இந்தப் பிரிவினைவாதமும், பாகுபாடும் அதோடு நிற்கவில்லை. பள்ளித் தலைவி,
விளையாட்டுத் தலைவி,பள்ளி விருந்தினர்களுக்கு வரவேற்பு என எல்லா
விதிகளுக்குமே “ கூப்பிடு அந்தச் சயின்ஸ் குரூப்பை” என்பதுதான் பள்ளி
வாழ்க்கையின் மாறாத விதி ஆகிவிட்டது. மற்ற வகுப்பு மாணவிகளின் கண்களில்
நாங்கள் வேற்றுக் கிரகவாசிகள்.
15 வருடங்களுக்கு முன்
என் அக்கா மகள் என்னிடம் “ 10-ம் வகுப்பில் கம்மி மார்க் வாங்கின மக்குப்
பசங்கதான் காமர்ஸ் குரூப்ல இருப்பாங்கன்னு எங்க டீச்சர் சொன்னாங்க.
நீங்களும் கம்மியா?” என என்னைக் கேட்டாள். நான் விளக்கினாலும் அவளுக்கு
டீச்சர் சொல்லே வேதவாக்கானது.
இரண்டு வருடங்களுக்கு முன் .. என் மகள் 10-ம் வகுப்பில் 95 சதவீத
மதிப்பெண்கள் எடுத்தாள்.பெரிய பதவியில் இருக்கிற எனது உறவினர் “சயின்ஸ்
குரூப் சேர்ந்திருங்க” என்றார். ஆனால் என் மகள் “ இல்லை. நான் மேனேஜ்மெண்ட்
குரூப்தான் சேரப்போறேன்”னு தெளிவாகச் சொல்லிட்டாள்.
ஏன்?
காலங்காலமாக ஏன் இந்த ஏற்றத்தாழ்வு? அறிவியல் அல்லாத பாடப் பிரிவுகளை
எடுப்பவர்களைச் “சராசரிக்கும் கீழே” என மதிப்பிடும் மனப்பாங்கு மாற
வேண்டாமா? தனக்கு எதில் ஆர்வம் என்பதை விடத் தன்மீது திணிக்கப்படுவதைப் பல
மாணவர்கள் படிக்க வேண்டியுள்ளது.
சில வருடங்களுக்கு முன் பிரேமா என்ற பெண் சிஏ படிப்பில் சாதித்தார். எத்தனை பிரேமாக்கள் தங்கள் கனவுகளைத் தொலைத்துள்ளனரோ?
No comments:
Post a Comment