மொழிப்பாடங்களில் ஒப்பீட்டளவில் தமிழை விட எளிமையானது ஆங்கிலம். தமிழ்
அளவுக்கு மெனக்கெடல் ஆங்கிலத்தில் தேவையில்லை. ஆங்கிலத்தை ஊன்றிப்
படிப்பவர்களால் இதை உணர முடியும்.
கை கொடுக்கும்
தொழிற்கல்விக்கான கட் ஆஃப் மதிப்பெண்களில் பலர் ஒரே புள்ளிகளைப்
பெறும்போது, பிறந்த தேதிக்கு அடுத்தபடியாக ஆங்கிலத்தில் எடுக்கும்
மதிப்பெண் முன்னுரிமையாகக் கொள்ளப்படும். அதனால், தமிழுக்கு முக்கியத்துவம்
அளிக்காதவர்கள் கூட ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற உழைப்பார்கள்.
கட்டுரை மற்றும் பாராகிராஃப் அளவான விடைகளைத் தரவேண்டிய வினாக்கள் தவிர இதர
பகுதிகளில் மதிப்பெண்களைக் குறைப்பதற்கு அதிக வாய்ப்பேயில்லை. எனவே
கூடுதல் மதிப்பெண்களைக் குவிக்க ஆங்கிலமே அதிகம் கைகொடுக்கும்.
சராசரியானவர்கள், சிறப்பிடம் பெறுபவர்கள் என சகல மாணவர்களுக்கும்
பயனளிக்கும் குறிப்புகளை இங்கே வழங்குகிறார், புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர்
அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில முதுகலையாசிரியர் எம்.சலீம்.
பொதுவானவை
ஆங்கிலத்தின் 2 தாள்களையும் பொறுத்தவரை, நேரம் தாராளமாக இருக்கும்
என்பதால், அனைத்துப் பகுதிகளிலும் நன்றாகத் திட்டமிட்டு எழுதி,
சரிபார்த்தாலே அதிக மதிப்பெண்கள் பெறலாம். தேர்வின் தொடக்கத்தில்
கிடைக்கும் 15 நிமிடங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பெரும்பாலானோர் தான் படித்த கேள்விகள் வந்திருக்கிறதா என்று பார்ப்பதோடு
சரி, முழு வினாத்தாளையும் படிப்பது இல்லை. அப்படிப் படித்துத் பார்த்தால்
கவனக்குறைவால் நிகழும் ஒன்றிரண்டு மதிப்பெண்கள் இழப்பைத் தடுக்கலாம்.
கவனக்குறைவால் கட்டுரைகள் மற்றும் பாராகிஃராப் அளவிலான விடைகளை மாற்றி
எழுதிவிடுவார்கள். E.R.C-ல் Poem அடையாளம் காண்பதில் அலட்சியம் காரணமாக
மதிப்பெண்களை இழக்க நேரும்.
Presentation மற்றும் கையெழுத்தில் கவனம் செலுத்துவது , மொழிப்பாடத்துக்கு
மிகவும் முக்கியம். இடமில்லை என்று வாக்கிய முடிவில் ஒரு வார்த்தையை
உடைத்து, அடுத்த வாக்கியத்தின் தொடக்கமாக எழுதுவது கூடாது. பக்கத்தின்
கடைசியில் ஒரு சில வரிகள் எழுதவே இடம் இருக்கிற நிலையில் புதிய பிரிவுக்கு
விடை எழுத ஆரம்பிப்பதைவிட, கால் பக்கத்துக்குக் குறைவான அந்த இடங்களை
பென்சிலால் அடித்துவிட்டு அடுத்த பக்கத்தில் எழுதுவது நல்லது. படிப்பது,
எழுதிப் பார்ப்பது போன்ற பயிற்சிகள் மூலமே ஆங்கிலத்தில் எழுத்துப் பிழைகளை
தவிர்க்க முடியும். சரியான கேள்வி எண்ணைக் குறிப்பிட்டிருக்கிறோமா என்று
தேர்வின் இறுதியில் சரிபார்க்க வேண்டும்.
முதல்தாள்- குறிப்புகள்
முதல் 10 வினாக்கள் Synonyms, Antonyms போன்ற ஒரு மதிப்பெண் வினாக்களில்
அனைவரும் முழு மதிப்பெண்களைப் பெறலாம். இதற்கு ஒவ்வொரு பாடத்தின் முடிவில்
இருக்கும் Glossary-யைத் தொடர்ந்து படித்து வருவதும், முந்தைய தேர்வு
வினாத்தாள்களில் பயிற்சி பெறுவதுமே போதும். அடுத்த 10 வினாக்கள், தலா 2
மதிப்பெண்ணுடன் 20 மதிப்பெண்களைத் தரக்கூடிய, எளிமையான ஆங்கில இலக்கணம்
பற்றிய வினாக்கள்.
இதில் மதிப்பெண் இழப்பது, அலட்சியம் காட்டுபவர்களுக்கு மட்டுமே நேரும்.
கேள்வி எண் 13-ல் Abbriviations, Acronym ஆகியவற்றில் எழுத்துப் பிழை
அதிகம் வரும் என்பதால் சராசரி நிலையில் உள்ள மாணவர்கள், அவற்றை சாய்ஸில்
விடலாம். கே.எண் 23-ல் Clipped word மற்றும் Sentence என 2ஐயும் எழுத
மறப்பது பெரும்பாலானோரின் வாடிக்கையாக இருப்பதால், அதில் கவனம் அதிகம்
இருக்கட்டும். இந்த 2 மார்க் வினாக்களிலும் முழு மதிப்பெண்கள் பெற பாட
இறுதியில் இருக்கும் பயிற்சிகளை அவ்வப்போது திருப்புதல் மேற்கொண்டாலே
போதும்.
கீழ் வகுப்புகளில் இருந்தே அடிப்படையான ஆங்கில இலக்கணத்தில் தேர்ந்தவர்கள்,
அடுத்த 10 வினாக்களுக்கும் எளிதில் முழு மதிப்பெண்கள் பெறலாம்.
மற்றவர்களுக்குச் சற்றுக் கூடுதல் பயிற்சி தேவை. கே.எண் 36, 37,38
ஆகியவற்றில் முழு மதிப்பெண்கள் பெற பாடநூலில் 294 -297 பக்க பயிற்சிகளில்
தேறினாலே போதும். அதிக மதிப்பெண்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இப்பகுதிகளில்
கவனம் வேண்டும். பிரிவு C-ன் 15 மதிப்பெண்களைப் பெற, வாசித்து அர்த்தம்
புரிந்தாலே போதும், முழு மதிப்பெண்கள் பெறலாம்.
அடுத்ததாக Poem (20மார்க்) பிரிவில் கெய்டுகளை விட, சொந்தமாக ஒரு நோட்டில்
தனக்கான வகையில் தயார் செய்து அவற்றை கெய்டாகப் பாவிப்பது மதிப்பெண்களை
அள்ளித்தரும். E.R.C தலா 3 மதிப்பெண் கேள்வியில், Poem மற்றும் Poet பெயர்
எழுதினாலே 2 மதிப்பெண் கிடைக்கும். விரிவாக எழுதுபவர்களுக்கு கூடுதலாக 1
மதிப்பெண்தான். Poem அடையாளம் காண, ஆசிரியர் சொல்லித்தரும் Key words களை
நினைவில் நிறுத்தப் பழகுங்கள்.
2-ம் தாள்- குறிப்புகள்
2-ம் தாளில் 20 மதிப்பெண்களுக்கு (Aural and Oral skills) திட்டமிட்டுத்
தயாராவதன் மூலம் 80 மதிப்பெண்களையும் எளிதாக வசமாக்கலாம். தேர்வுத்தாள்
திருத்துபவர் விடையின் கூறுகளுக்குத் தனி மதிப்பெண்களை வழங்குவார்
என்பதால், உள்ளடக்கம் சுமாராக எழுதினாலும் தொடக்கம் முதல் முடிவு வரை,
ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி விடைக்கான கூறு நிலைகளைச் சரியாக அதன்
வரிசைப்படி எழுதுவதன் மூலமே மதிப்பெண்களை அள்ளலாம்.
7 துணைப்பாடங்கள்(Non-details) உள்ளடங்கிய பாடங்களை ஆசிரியர் நடத்தும்போதே
நன்றாகக் கவனித்துக், கதைகளை அதன் நிகழ்வுகள், பெயர்களோடு
உள்வாங்கியிருந்தாலே போதும், சராசரி மாணவர்களுக்குக் கூட மதிப்பெண்கள்
உத்திரவாதம் உண்டு. 25 மதிப்பெண்களுக்கான பிரிவு ஏ-க்கு கட்டுரை தவிர்த்து,
ஏனையவற்றில் இந்த வகையில் மதிப்பெண் பெறலாம். பிரிவு-B Study Skills-ல்
சிறு கவனக்குறைவால் மதிப்பெண்களை இழப்பார்கள். உதாரணத்திற்கு இமெயில்
குறித்த பதிலில் வெப்சைட் எழுதுபவர்கள் அதிகம். இதே பிரிவில் வரும் spot
the errors, 5 மதிப்பெண்களையும் அடிப்படை இலக்கண அறிவுடன் எளிதில்
அள்ளலாம்.
பிரிவு C-ல் 5 மதிப்பெண்ணுக்கான Summary Writing பதில் எழுதுகையில் Title,
Rough copy, Fair copy ஆகிய கூறுகளை முன்வைப்பதன் மூலமே 4 மார்க்
பெற்றுவிடலாம். அதே போல அடுத்து வரும் 10 மார்க்கிற்கான Wanted
(கே.எண்:24)கேள்வியிலும் From, to, Salutation, Body, Biodata கூறுகள்
மூலமே 10 மார்க் பெற்றுவிடலாம். அடுத்த 15 மார்க்கிற்கான பிரிவு D-யிலும்
(Non-Lexical Fillers மற்றும் Road map)ஓரளவு பொது அறிவோடு அணுகினால்
போதும்.
கட்டுரைகள் கவனம்:
சராசரி மாணவர்கள் தவிர்ப்பதும், நன்றாகப் படிப்பவர்கள் சறுக்குவதுமான
கட்டுரை பகுதிக்குத் தனிக்கவனம் வேண்டும். முதல்தாளில் பிரிவு டி,
ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைக்க வாய்ப்புள்ள கட்டுரை மற்றும் பாராகிஃராப்
அடங்கியது. இதில் ஆங்கில வழி மாணவர்கள் கூட சுலபமாக மதிப்பெண் இழப்பார்கள்.
அலட்சியம், அவசரம் ஆகியவற்றாலே பிழைகள் நேர வாய்ப்புள்ளது என்பதால்,
சொந்தமாக எழுதுவதைத் தவிர்க்கலாம்.
அப்படிச் சொந்தமாக எழுதுவதாக இருப்பின், முன்பே தயார் செய்ததை ஆசிரியரிடம்
சரிபார்த்த பிறகு அவற்றைப் படித்து எழுதுவது சிறப்பு. சொந்த
வார்த்தைகளைவிட, பாடத்தின் சொற்களஞ்சியத்தையே பின்பற்றலாம். இவை பிழைகளை
தவிர்க்க உதவும். மேலும், முக்கிய இடங்களை வேறு நிற மையினால் (நீலம் அல்லது
கறுப்பு) எழுதி வேறுபடுத்தி காட்டுவது, பென்சிலால் அடிக்கோடிடுவது,
ஏற்கனவே பயிற்சி செய்த மேற்கோள்களை (Quotations)பயன்படுத்துவது ஆகியவை
ஒன்றிரண்டு மதிப்பெண் இழப்பையும் தவிர்க்கும்.
நன்றாகப் படிப்பவர்கள், எல்லோரும் பதிலளிக்க வாய்ப்புள்ள முதல் பாட
கேள்விகளை சாய்ஸில் விட்டு, இதர பாடங்களை எழுதுவது தனித்தன்மையைப்
பறைசாற்றும். தாமதமாகத் தேர்வுக்குத் தயாராகுபவர்கள் முதல் 2 பாடங்களை
மட்டுமே ஊன்றிப் படித்து கட்டுரை, பாராகிஃராப் வினாக்களை எதிர்கொள்ளலாம்.
பிரிவு E, poetry பகுதியில், 3-ல் 1 என சாய்ஸில் எழுதலாம் என்பதால்,
முதலிரண்டு poemக்கான paragaraphs தயார் செய்தாலே போதும்.
இது தற்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கும் மாணவர்களுக்கான யோசனை மட்டுமே.
2-ம்தாளில் கட்டுரைக்கான கே.எண்: 12-ல், கதைதானே என்று கதைவிடுதல் கூடாது.
படித்து சென்று எழுதுவதே நலம். சொந்தமாக எழுதும் மீத்திறன் மாணவர்கள் கூட,
தங்களது சொல்லாக்கத்தில் பாடப்பகுதி சொற்களஞ்சியத்திலிருந்து
கட்டுரையாக்குவது நல்லது. சராசரி மாணவர்கள் கட்டுரைகளைத் தவிர்த்து
விடுவார்கள். கொடுத்திருக்கும் குறிப்புகளை வைத்தே எழுத வேண்டிய கட்டுரை
என்பதால், 10 மதிப்பெண் கேள்வியைத் தவிர்க்காது எழுதுவது மதிப்பெண் சரிவைத்
தடுக்கும்.
பிரிவு-F,10 மார்க் பொதுக்கட்டுரையில், வெறுமனே கதையாக அல்லாது தகவல்கள்
நிரம்பிய தனிப்பட்டவை மற்றும் அறிவியல் தொடர்பான தலைப்புகளை சாய்ஸில்
தெரிந்தெடுத்து எழுதுவது மார்க் குறைக்க வாய்ப்பளிக்காது. மேற்கண்ட
தலைப்புகளில் முன்பே தயார் செய்து அவற்றை எழுதுவதே தவறுகளையும் தவிர்க்கும்